புறநானூற்றுத் திணைகள்

கரந்தை
பகைவர்களால் கவர்ந்து செல்லப்பட்ட பசுக்களை மீட்டு வருதல் – Retrieving cattle that was taken.

காஞ்சி
தன் நாட்டைக் கைப்பற்ற வந்த மாற்றரசனோடு காஞ்சிப்பூவைச் சூடி எதிர்த்துப் போரிடுவது காஞ்சித் திணையாகும் – Protecting one’s country.

கைக்கிளை
கைக்கிளை என்பது ஒருதலைக் காதல். இதனை அகப்பொருள் திணையாகவும் கூறுவர் – one-sided love.

தும்பை
பகை வேந்தர்கள் இருவரும் வெற்றி ஒன்றையே இலக்காக் கொண்டு கடும் போர்ப் புரிவது தும்பைத் திணையாகும் – Battle.

நொச்சி
பகை வேந்தரால் முற்றுகையிடப்பட்ட தம் மதிலைக் காக்க வேண்டி உள்ளிருந்தே வெளியே இருக்கும் பகைவேந்தனோடு நொச்சிப்பூச் சூடிப்போரிடுவது நொச்சித் திணையாகும் – Protection of the fort.

பாடாண்
பாடப்படும் ஆண்மகனது வெற்றி, புகழ், மறம், கொடை, கல்வி, அருள் முதலிய பண்புகளைப் பாடிப் புகழ்வது பாடாண் திணையாகும் – Praise.

பெருந்திணை
பெருந்திணை என்பது பொருந்தாக் காதல். இதனை அகப்பொருள் திணையாகவும் கூறுவர் – unsuitable love.

பொதுவியல்
வெட்சி முதல் பாடாண் வரை உள்ள புறத்திணைகளுக்குப் பொதுவானவற்றையும், அவற்றுள் கூறபப்படாதனவற்றையும் கூறுவது பொதுவியல் திணையாகும் – common matters.

வஞ்சி
பகைவர் நாட்டைக் கைப்பற்றக் கருதி வஞ்சிப் பூவைத்தலையிலே சூடிப் போரிடப் புகுவது வஞ்சித் திணையாகும் – Preparation for war.

வாகை
போரில் வெற்றி பெற்ற மன்னன் வாகைப்பூச்சூடி மகிழ்வது வாகைத் திணையாகும் – victory celebration.

வெட்சி
பகை நாட்டின்மீது போர் தொடங்குமுன் அந்நாட்டில் உள்ள ஆநிரைகளுக்குத் தீங்கு நேரக்கூடாது எனக் கருதும் மன்னன் வெட்சிப்பூச் சூடிய தன் வீரர்களை அனுப்பி அவற்றைக் கவர்ந்துவரச்செய்வது வெட்சித் திணையாகும். Prelude to war and cattle raid.

——————————————————————————————————————————————————————————————————————————–

புறநானூற்றுத் துறைகள்

அரசவாகை – அரசனது இயல்பையும் அவனது வெற்றியைப் பற்றியும் கூறுதல்

ஆனந்தப் பையுள் –  ஒருவன் இறந்ததுபற்றி அவனுடைய சுற்றத்தார் வருந்திக் கூறுதல்

இயன் மொழி – தலைவன் எதிரே சென்று, அவனது செயல்களையும் அவன் குலத்தோரின் செயல்களையும் ஏற்றிப் புகழ்தல்

உடனிலை – ஒருங்கே இருக்கும் இருவரைப் புகழ்ந்து பாடுதல்

உண்டாட்டு – வீரர் மதுவை உண்டு களித்தலைக் கூறுதல்

உவகைக் கலுழ்ச்சி – விழுப்புண்மிகுந்த உடம்பையுடைய மறவனின் கண்டு அவனது தாய்/மனைவி மகிழ்ந்து கண்ணீர் வடித்தல்

எருமை மறம் – படைவீரர் புறமுதுகிட்ட நிலையிலும் தன் பகைப்படையை அஞ்சாது ஒருவன் போரிட்டு நிற்றல்

ஏர்க்கள உருவகம் – போர்க்களச் செயல்களை ஏர்க்களச் செயல்களாக உருவகப்படுத்திக் கூறுதல்

ஏறாண் முல்லை – வீரம் மிகுந்த மறக் குடியை மேலும் மேலும் உயர்த்திக் கூறுதல்

கடை நிலை – அரண்மனை வாயிலில் நின்று பாடுதல்

கடைநிலை விடை – தலைவன் வாயிலில் நின்று பாடிப் புலவன் விடை பெறுதல்

களிற்றுடனிலை – தன்னால் கொல்லப்பட்ட யானையோடு ஒரு வீரன் தானும் வீழ்ந்து மடிதலைக் கூறுதல்

குடிநிலை உரைத்தல் – பழமையும் வீரமும் மிகுந்த குடியின் வரலாற்றைக் கூறுதல்

குடை மங்கலம் – அரசன் குடையைப் புகழ்ந்து பாடுவது

குதிரை மறம் – குதிரை வீரன் ஒருவனின் வீரத்தையோ அல்லது அவனுடைய குதிரையின் வீரத்தையோ கூறுதல்

குறுங்கலி – ஒருவனால் துறக்கப்பட்ட அவன் மனைவியை அவனோடு சேர்க்கும் பொருட்டு இவள்பால் அருள் செய்தல் என வேண்டுதல்

கையறு நிலை – தலைவன் இறந்த பின் அவன் பெருமையைக் கூறி வருந்துதல்

கொற்ற வள்ளை – அரசனுடைய வெற்றியைக் கூறி அவனுடைய பகைவரின் நாடு அழிதற்கு வருந்துதல்

சால்பு முல்லை – சான்றோர்களின் சான்றாண்மையைக் கூறுதல்

செருமலைதல் – பசுக்களைக் கவர்ந்து சென்ற பகைவரை நெருங்கி அவர்கள் அஞ்சுமாறு போர் செய்தல்

செருவிடை வீழ்தல் – அகழியையும் காவற் காட்டையும் காத்து சாவைப் பெற்ற வீரனின் சிறப்பைக் கூறுதல்

செவியறிவுறூஉ – அரசன் உலகைக் காக்கும் முறையை அவனிடம் சொல்லி அவன் செவியிற் புகுத்தி அறிவித்தல்

தலைத் தோற்றம் – ஒரு வீரன் பகைவர்களின் பசுக்களைக் கவர்ந்து கொண்டுவந்தது குறித்து சுற்றத்தார் தம்முடைய மகிழ்ச்சியைக் கூறுதல்

தாபத நிலை – கணவன் இறந்ததால் மனைவி கைம்மை நோன்பை மேற்கொண்டிருத்தலை உரைத்தல்

தாபத வாகை – முனிவரின் ஒழுக்க நிலையை உரைத்தல்

தானை நிலை – இரு திறத்தாரும் தன் வீரத்தைப் புகழுமாறு ஒரு வீரன் போர்க்களத்தில் சிறப்பு எய்தல்

தானை மறம் – இரு படைகளும் வலிமையுடையவை என்பதால் அழிவு மிகுதி ஆகும் என்பதைக் கருதிப் போரைத் தவிர்க்கலாம் என்றுக் கூறுதல்

துணை வஞ்சி – பிறரை வெல்லவோ கொல்லவோ துணிந்து நிற்பவனிடம் சென்று அறிவுறுத்திச் சமரசம் செய்தல்

தொகை நிலை – போர்க்களத்தில் அனைவரும் ஒருங்கே மாய்ந்ததைக் கூறுதல்

தொடாக் காஞ்சி – பேய்கள் அஞ்சி நீங்குமாறு புண்பட்டு வீழ்ந்த வீரனுடைய மனைவி அவனைக் காத்தல்

நல்லிசை வஞ்சி – பகைவரது இடங்கள் கெடுமாறு வென்ற வீரனின் வெற்றியைக் கூறுதல்

நீண்மொழி – ஒரு வீரன் போர்க்களத்தில் கூறிய சூளுரையைக் கூறுவது

நூழிலாட்டு – ஒரு வீரன் பகைவர் படை அழியுமாறு தன் மார்பில் பட்ட வேலைப் பறித்து எறிதல்

நெடுமொழி – போரில் வெற்றி பெற்ற வீரன், தன் அரசனிடம் தன்னுடைய பெருமையைக் கூறுதல்

பரிசில் கடாநிலை – பரிசில் வழங்கக் காலம் தாழ்த்தும் தலைவனுக்குப் பரிசில் வேண்டுவோன் தனது நிலையைக் கூறி பரிசிலை வலியுறுத்தல்

பரிசில் துறை – பரிசிலர் புரவலனிடம் சென்று தாம் பெறக் கருதியது இதுவெனக் கூறுதல்

பரிசில் விடை – பரிசில் பெற வந்தவன் ஒருவன் அதனைப் பெற்றானாயினும் பெறானாயினும், பரிசில் அளிப்பவனிடம் விடை பெறுதல்

பழிச்சுதல் – புகழ்தல்

பாடாண் பாட்டு – ஒருவனுடைய ஆற்றல், ஒளி, ஈகை, அருள் ஆகியவற்றை ஆராய்ந்துக் கூறுதல்

பாண்பாட்டு – போரில் இறந்த வீரர்க்குப் பாணன் சாவுப் பண் பாடித் தன் கடன் கழித்தல்

பாணாற்றுப்படை – பரிசு பெற்ற பாணன் மற்றொரு பாணனைப் புரவலரிடம் ஆற்றுப்படுத்துவது

பார்ப்பன வாகை – கேட்கத் தக்கவை கேட்டுத் தலைமை பெற்ற பார்ப்பானின் வெற்றியைப் புகழ்ந்து பாடுதல்

பிள்ளைப் பெயர்ச்சி – நிமித்தம் நன்றாக இருந்தாலும் அஞ்சாது சென்று போர் புரிந்த வீரனுக்கு மன்னன் கொடைப் புரிதல்

புலவர் ஆற்றுப்படை – புலவன் ஒருவன் மற்றொரு புலவனிடம் தலைவனுடைய இயல்பையும் ஊரையும் பற்றிக் கூறி அப்புலவனைத் தலைவனிடம் ஆற்றுப்படுத்துவது

பூக்கோள் காஞ்சி – போருக்குச் செல்லும் வீரன் அந்தப் போருக்குரிய அடையாளப் பூவை பெறுவதையும் சூடுவதையும் கூறுதல்

பூவை நிலை – மனிதரை வானுலகில் இருப்பவர்களோடு உவமித்துக் கூறுதல்

பெருங்காஞ்சி – நிலையில்லாமையைப் பற்றிக் கூறுதல்

பெருஞ்சோற்று நிலை – போருக்குச் செல்லும் மன்னன் அவனுடன் போருக்குச் செல்லும் வீரர்களுக்கு விருந்தளித்தல்

பேய்க்காஞ்சி – போர்க்களத்தில் புண்பட்டு வீழ்ந்தவர்களைப் பேய் அச்சுறுத்துவதைக் கூறுதல்

பொருண்மொழிக் காஞ்சி – உயிர்க்கு நலம் செய்யும் உறுதிப் பொருள்களை எடுத்துக் கூறுதல்

மகட்பாற் காஞ்சி – மகளை வேண்டும் தலைவனுடன் மாறுபட்டு நிற்றல்

மகள் மறுத்தல் – ஒரு தலைவன் திருமணம் செய்யத் தம் மகளை வேண்ட, அதைப் பெண்ணின் தந்தை மறுத்துச் சொல்லுதல்

மழபுல வஞ்சி – பகைவர் நாட்டைக் கொள்ளையிடுதல் எரித்தல் ஆகிய செயல்களைச் செய்து அழித்தலைப்பற்றிக் கூறுதல்

மறக்கள வழி – மன்னனை உழவுத் தொழில் புரியும் வேளாளனுடன் ஒப்பிட்டுக் கூறுதல்

மறக்கள வேள்வி – பேய்கள் உண்ணுமாறு போர்க்களத்தில் வேள்வி செய்தல்

மனையறம் துறவறம் – இல்லறம் துறவறம் ஆகியவற்றின் வேறுபாடுகளைக் கூறுதல்

முதல் வஞ்சி – பழம்புகழ் வாய்ந்த முன்னோர் சிறப்புக் கூறுதல்

முதுபாலை – காட்டில் தன் கணவனை இழந்த மடந்தையின் தனிமையைச் சொல்லுதல்

முதுமொழிக் காஞ்சி – அறிவுடையோர், அறம், பொருள், இன்பம் என்னும் முப் பொருளினது உறுதி தரும் தன்மையைக் கூறுதல்

மூதின் முல்லை – வீரர்க்கு அல்லாமல் அம்மறக்குடியில் பிறந்த மகளிர்க்கும் சினம் உண்டாதலை மிகுத்துச் சொல்லுதல்

வஞ்சினக் காஞ்சி – பகைவரை இழித்துக் கூறி இன்னது செய்வேன், செய்யேன் ஆயின் இன்ன தன்மையன் ஆவேன் என்று கூறுதல்

வல்லாண் முல்லை – ஒரு வீரனின் வீட்டையும் ஊரையும் இயல்பினையும் கூறி அவனுடைய ஆண்மைத் தன்மையைப் பாராட்டுதல்

வாழ்த்தியல்: தலைவனை வாழ்த்துதல்

வாழ்த்து – தலைவனின் வெற்றி கொடை ஆகியவற்றைப் பாராட்டுதல்

வாள் மங்கலம் – தலைவனுடைய வாளைப் புகழ்தல்

விறலியாற்றுப்படை – ஆடலும் பாடலும் புரியும் பெண்ணான விறலியைப் அரசனிடம் சென்று பாடி ஆடிப் பரிசில் பெற வழிகாட்டுதல்

வேத்தியல் – வீரர்கள் மன்னனின் பெருமையைக் கூறுதல்