பதிற்றுப்பத்து

எளிய உரை – வைதேகி

18, 25, 47, 52, 56, 61, 87

முதல் பத்து – நமக்கு கிடைக்கவில்லை (1 – 10)
இரண்டாம் பத்து – சேர மன்னன் இமையவரம்பன் நெடுஞ்சேரலாதன் – குமட்டூர்க் கண்ணனார் பாடியது (11 – 20)
மூன்றாம் பத்து – சேர மன்னன் பல்யானைச் செல்கெழு குட்டுவன்  – பாலைக் கெளதமனார் பாடியது (21 – 30)
நான்காம் பத்து – சேர மன்னன் களங்காய்க்கண்ணி நார்முடிச் சேரல் – காப்பியாற்றுக் காப்பியனார் பாடியது (31 – 40)
ஐந்தாம் பத்து – சேர மன்னன் கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் – பரணர் பாடியது (41 – 50)
ஆறாம் பத்து – சேர மன்னன் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன் – காக்கைபாடினியார் நச்செள்ளையார் (பெண் புலவர்) பாடியது (51 – 60)
ஏழாம் பத்து – செல்வக்கடுங்கோ வாழியாதன் –  கபிலர் (61 – 70)
எட்டாம் பத்து – சேர மன்னன் பெருஞ்சேரல் இரும்பொறை – அரிசில்கிழார் பாடியது (71 – 80)
ஒன்பதாம் பத்து  – சேர மன்னன் இளஞ்சேரல் இரும்பொறை – பெருங்குன்றூர் கிழார் பாடியது (81 – 90)
பத்தாம் பத்து  – நமக்கு கிடைக்கவில்லை (91 –  100)

ஒளவை துரைசாமி உரை:

துறை: செந்துறைப் பாடாண் – செந்துறையாவது விகார வகையான் அமரராக்கிச் செய்யும் அறுமுறை வாழ்த்தினைப் போலாது, உலகினுள் இயற்கை வகையான் இயன்ற மக்களைப் பாடுதல் (நச்சினார்க்கினியர் உரை, தொல்காப்பியம் பொருள் 82).

தூக்கு: செந்தூக்குஅஃதாவது ஆசிரியப்பா (அகவல்பா) தூக்கு என்பது செய்யுள் அடி வரையறை கொண்டு பாக்களைத் துணிப்பது.  அஃதாவது பா வகையுள் இன்னபாவெனத் துணித்து கூறுவதெனவறிக.

வண்ணம்: ஒழுகு வண்ணம்ஒழுகிய ஓசையால் செல்வது.

பதிற்றுப்பத்து 18,  பாடியவர் – குமட்டூர்க் கண்ணனார், பாடப்பட்டோன் – இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்,*கூந்தல் விறலியர்*, துறை: இயன்மொழி வாழ்த்து, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

உண்மின் கள்ளே, அடுமின் சோறே,
எறிக திற்றி, ஏற்றுமின் புழுக்கே,
வருநர்க்கு வரையாது பொலங்கலந் தெளிர்ப்ப
இருள் வணர் ஒலிவரும், புரி அவிழ் ஐம்பால்
ஏந்து கோட்டு அல்குல் முகிழ் நகை மடவரல்  5
*கூந்தல் விறலியர்* வழங்குக அடுப்பே,
பெற்றது உதவுமின், தப்பு இன்று, பின்னும்,
மன் உயிர் அழிய யாண்டு பல துளக்கி,
மண் உடை ஞாலம் புரவு எதிர் கொண்ட
தண் இயல் எழிலி தலையாது மாறி,  10
மாரி பொய்க்குவது ஆயினும்,
சேரலாதன் பொய்யலன் நசையே.

பொருளுரை:  மன்னனிடம் வரிசைப் பெற்ற கூந்தல் விறலியரே! கள்ளை உண்பீர்களாக, சோற்றை ஆக்குவீர்களாக, இறைச்சியை அறுப்பீர்களாக, வேக வைத்ததற்குரிய கறி வகைகளை உலையில் ஏற்றுவீர்களாக, முடி அவிழ்ந்து கருமையான, குழன்ற, அடர்ந்த ஐந்து பாகங்களாக முடிக்கப்பட்ட கூந்தலையும், உயர்ந்த பக்கங்களையுடைய அல்குலையும், அரும்பும் புன்னகையையும், இளமையினையும் உடையவர்களே! வருபவர்களுக்கு எல்லையில்லாமல் வழங்கும் பொருட்டு, உங்கள் பொன் அணிகள் ஒலிக்க, உண்ணுவதற்குச் சமைப்பீர்களாக.

நீங்கள் பெற்ற செல்வத்தைப் பிறருக்குக் கொடுத்து உதவுங்கள். அதனால் தவறு இல்லை. நிலைபெற்ற உயிர்கள் அழியுமாறு பல ஆண்டுகளாக உயிர்களை வருத்தி, மண்ணையுடைய உலகத்தில் காப்பதை மேற்கொண்ட, குளிர்ச்சியான இயல்பையுடைய முகில்கள் தாங்கள் மேற்கொண்ட மழைத் தொழிலிலிருந்து மாறி, மழைப் பெய்யாது பொய்த்தாலும், பின்னும், உங்கள் விருப்பம் பழுதாகா வண்ணம் சேரலாதன் உங்களுக்குக் கொடுப்பான்.

குறிப்பு:  கூந்தல் விறலியர் என்பவர்கள் ஆடல் பாடல் ஆகியவற்றில் சிறந்து, மன்னனின் வரிசைபெற்ற மகளிர். எதிர்கொண்ட (8) – ஒளவை துரைசாமி உரை – மேற்கொண்ட, அருள் அம்பலவாணர் உரை – ஏற்றுக்கொண்ட.

சொற்பொருள்:   உண்மின் கள்ளே – கள்ளை உண்பீர்களாக (மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி), அடுமின் சோறே – சோற்றை ஆக்குவீர்களாக, எறிக திற்றி – இறைச்சியை அறுப்பீர்களாக, ஏற்றுமின் புழுக்கே – வேக வைத்தற்குரிய கறி வகைகளை உலையில் ஏற்றுங்கள் (மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி), வருநர்க்கு வரையாது பொலங்கலந் தெளிர்ப்ப – வருபவர்களுக்கு எல்லையில்லாமல் வழங்கும் பொருட்டு உங்கள் பொன் அணிகள் ஒலிக்க, இருள் வணர் ஒலிவரும் புரி அவிழ் ஐம்பால் – முடி அவிழ்ந்து இருண்ட குழன்ற அடர்ந்த ஐந்து பாகங்களாக முடிக்கப்பட்ட கூந்தல், ஏந்து கோட்டு அல்குல் – உயர்ந்த பக்கத்தையுடைய அல்குல், முகிழ் நகை – அரும்பும் புன்னகை, மடவரல் – இளமையினை உடையவர்கள், கூந்தல் விறலியர் – மன்னனிடம் வரிசைப் பெற்ற விறலியர், வழங்குக அடுப்பே – உண்ணுவதற்கு சமைப்பீர்களாக, பெற்றது உதவுமின் – நீங்கள் பெற்ற செல்வத்தைப் பிறருக்குக் கொடுத்து உதவுங்கள் (மின் – முன்னிலைப் பன்மை வினைமுற்று விகுதி), தப்பு இன்று – தவறு இல்லை, பின்னும் – பின்பும், மன் உயிர் அழிய – நிலைபெற்ற உயிர்கள் அழிய, யாண்டு பல துளக்கி – பல ஆண்டுகளாக வருத்தி, மண் உடை ஞாலம் – மண்ணையுடைய உலகம், புரவு எதிர் கொண்ட – காப்பதை மேற்கொண்ட, தண் இயல் எழிலி தலையாது மாறி – குளிர்ச்சியான இயல்பையுடைய முகில்கள் மேற்கொண்ட மழைத் தொழிலிலிருந்து மாறி, மாரி பொய்க்குவது ஆயினும் – மழைப் பெய்யாது பொய்த்தாலும், சேரலாதன் பொய்யலன் நசையே – உங்கள் விருப்பம் பழுகாதாகா வண்ணம் சேரலாதன் கொடுப்பான் (நசையே – ஏகாரம் அசைநிலை)

பதிற்றுப்பத்து 25, *கான் உணங்கு கடு நெறி*, பாடியவர்: பாலைக் கெளதமனார், பாடப்பட்டவன்: பல்யானைச் செல்கெழு குட்டுவன், துறை: வஞ்சித்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கும் வஞ்சித்தூக்கும், வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்

மா ஆடிய புலன் நாஞ்சில் ஆடா;
கடாஅம் சென்னிய கடுங்கண் யானை
இனம் பரந்த புலம் வளம் பரப்பு அறியா;
நின் படைஞர் சேர்ந்த மன்றம் கழுதை போகி
நீ உடன்றோர் மன் எயில் தோட்டி வையா ; 5
கடுங்கால் ஒற்றலின், சுடர் சிறந்து உருத்துப்
பசும் பிசிர் ஒள் அழல் ஆடிய மருங்கின்,
ஆண்டலை வழங்கும் *கான் உணங்கு கடு நெறி*
முனை அகன் பெரும் பாழ் ஆக மன்னிய,
உரும் உறழ்பு இரங்கும் முரசின், பெருமலை  10
வரை இழி அருவியின் ஒளிறு கொடி நுடங்கக்,
கடும் பரி கதழ் சிறகு அகைப்ப, நீ
நெடுந்தேர் ஓட்டிய பிறர் அகன்தலை நாடே.

பொருளுரை:  உன்னுடைய குதிரைப்படை சென்று போரிட்ட வயல்கள் கலப்பைகள் உழ முடியாதபடி அழிந்தன, மதநீரை வடிக்கும் தலையையும் கடும் பார்வையையும் உடைய உன்னுடைய யானைக் கூட்டம் படர்ந்து போரிட்ட வயல்கள் வளமை பயன் இல்லாமல் அழிந்தன, உன்னுடைய படைகள் அடைந்து போரிட்ட மன்றங்களில் (மனிதர்கள் நீங்கி) கழுதைகள் போய் அவை பாழ்பட்டன, உன் பகைவர்களின் பெரிய மதில்கள் காவல் இல்லாது அழிந்தன, மிக்க காற்று எழுந்ததால் சுடர் மிக எழுந்து வெப்பம் ஆகி பசிய பொறிகளையுடைய காட்டுத் தீ பரவிய இடத்தில்,  பேராந்தைகள் வழங்கும் காட்டின் கடிய வழிகளும் ஆரலைக் கள்வர்கள் வழியில் செல்பவர்களை வருத்தும் அகன்ற பெரிய இடங்கள் பாழாகி அழிந்தன, இடிபோலும் முழங்கும் முரசுடன், பெரிய மலையிலிருந்து விழும் அருவிபோல் விளங்கும் துகில் கொடிகள் அசைய, விரைந்த செலவாகிய, சிறகுகளையுடைய பறவை போன்று குதிரைகள் ஓட, நீ உன்னுடைய நெடிய தேர்களைச் செலுத்திய பகைவரின் அகன்ற இடத்தையுடைய நாடுகள், 

குறிப்பு:  பட்டினப்பாலை 255-258 – பெரு விழாக் கழிந்த பேஎம் முதிர் மன்றத்துச் சிறு பூ நெருஞ்சியோடு அறுகை பம்பி அழல்வாய் ஓரி அஞ்சு வரக் கதிப்பவும் அழு குரல் கூகையோடு ஆண்டலை விளப்பவும்.  ஆண்டலை (8) – அருள் அம்பலவாணர் – ஆண்டலைப்புள், ஒளவை துரைசாமி உரை – காட்டுக்கோழி, பொ. வே. சோமசுந்தரனார் பட்டினப்பாலை 258 உரையில் – கோட்டான், ஆந்தை என மருவி வழங்குவதுமது.  கதழ் – கதழ்வும் துனைவும் விரைவின் பொருள் (தொல்காப்பியம், உரியியல் 19).

சொற்பொருள்:   மா ஆடிய புலன் நாஞ்சில் ஆடா – உன்னுடைய குதிரைப்படை சென்று போரிட்ட வயல்கள் கலப்பைகள் உழ முடியாதபடி அழிந்தன, கடாஅம் சென்னிய கடுங்கண் யானை இனம் பரந்த புலம் வளம் பரப்பு அறியா – மதநீரை வடிக்கும் தலையையும் கடும் பார்வையையும் உடைய உன்னுடைய யானைக் கூட்டம் படர்ந்து போரிட்ட வயல்கள் வளமை பயன் இல்லாமல் அழிந்தன (கடாஅம் – அளபெடை), நின் படைஞர் சேர்ந்த மன்றம் கழுதை போகி – உன்னுடைய படைகள் அடைந்து போரிட்ட மன்றங்களில் (மனிதர்கள் நீங்கி) கழுதைகள் போய் அவை பாழ்பட்டன, நீ உடன்றோர் மன் எயில் தோட்டி வையா – உன் பகைவர்களின் பெரிய மதில்கள் காவல் இல்லாது அழிந்தன, கடுங்கால் ஒற்றலின் – மிக்க காற்று எழுந்ததால், சுடர் சிறந்து உருத்துப் பசும் பிசிர் ஒள் அழல் ஆடிய மருங்கின் – சுடர் மிக எழுந்து வெப்பம் ஆகி பசிய பொறிகளையுடைய காட்டுத் தீ பரவிய இடத்தில், ஆண்டலை வழங்கும் கான் உணங்கு கடு நெறி – பேராந்தைகள் வழங்கும் காட்டின் கடிய வழி, முனை அகன் பெரும் பாழ் ஆக மன்னிய – ஆரலைக் கள்வர்கள் வழியில் செல்பவர்களை வருத்தும் இடங்கள் அகன்ற பெரிய இடங்கள் பாழாகி அழிந்தன, உரும் உறழ்பு இரங்கும் முரசின் – இடிபோலும் முழங்கும் முரசுடன் (உறழ் – உவம உருபு), பெருமலை வரை இழி அருவியின் ஒளிறு கொடி நுடங்க – பெரிய மலையிலிருந்து விழும் அருவிபோல் விளங்கும் துகில் கொடிகள் அசைய (அருவியின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), கடும் பரி கதழ் சிறகு அகைப்ப – விரைந்த செலவாகிய சிறகுகளையுடைய பறவை போன்று குதிரைகள் ஓட, நீ நெடுந்தேர் ஓட்டிய பிறர் அகன்தலை நாடே – நீ உன்னுடைய நெடிய தேர்களைச் செலுத்திய பகைவரின் அகன்ற இடத்தையுடைய நாடு (நாடே – ஏகாரம் அசைநிலை)

பதிற்றுப்பத்து 47, பாடியவர் – பரணர்,  பாடப்பட்டோன் – கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன், *நன் நுதல் விறலியர்*, துறை: செந்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

அட்டு ஆனானே குட்டுவன், அடுதொறும்
பெற்று ஆனாரே பரிசிலர் களிறே,
வரை மிசை இழிதரும் அருவியின், மாடத்து
வளி முனை அவிர்வரும் கொடி நுடங்கு தெருவில்,
சொரி சுரை கவரும் நெய் வழிபு உராலின்,  5
பாண்டில் விளக்குப் பரூஉச்சுடர் அழல,
*நன் நுதல் விறலியர்* ஆடும்
தொல் நகர் வரைப்பின், அவன் உரை ஆனாவே.

பொருளுரை:  சேரன் செங்குட்டுவன் பகைவரை அழித்தும் அமையாதவனாக இருக்கின்றான். அவன் போரிடும் பொழுதெல்லாம், களிற்று யானைகளைப் பெற்று அமையாதவர்கள் ஆகி அவன் போர்ச் சிறப்பைப் புகழ்ந்து பாடுவார்கள் பரிசில் மாக்கள். மலை மேலிருந்து கீழே விழும் அருவியைப் போல மாடங்களிலிருந்து காற்றால் அசையும் ஒளியுடைய கொடிகள் பறக்கும் தெருவில், எண்ணெயைச் சொரியும் திரிக்குழாயானது தான் ஏற்றுக் கொண்ட எண்ணெயைப் பரவுவதால், பாண்டில் விளக்கின் பருத்த திரி எரிய, அழகிய நெற்றியையுடைய விறலியர் ஆடும் பழைய நகரின் எல்லையில் அவனைப் புகழும் புகழுரைகள் நீங்காது நிலவின.

குறிப்பு:  நெய் வழிபு உராலின் (5) – அருள் அம்பலவாணர் உரை – நெய் வழிந்து பரவுவதால், ஒளவை துரைசாமி உரை – நெய் வழியுமாறு பெய்து நிரப்புவதால்.

சொற்பொருள்:  அட்டு ஆனானே குட்டுவன் – சேரன் செங்குட்டுவன் பகைவரை அழித்தும் அமையான் ஆகின்றான் (ஆனானே – ஏகாரம் அசைநிலை), அடுதொறும் – அவன் போரிடும் பொழுதெல்லாம், பெற்று ஆனாரே – அடைந்து அமையாதவர்கள் (ஆனாரே – ஏகாரம் – அசைநிலை), பரிசிலர் – பரிசில் மாக்கள், களிறே – களிற்று யானை, வரை மிசை இழிதரும் அருவியின் – மலை மேலிருந்து கீழே விழும் அருவியைப் போல (அருவியின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), மாடத்து வளி முனை அவிர்வரும் – மாடங்களிலிருந்து காற்றால் அசையும் ஒளியுடைய, கொடி நுடங்கு தெருவில் – கொடி பறக்கும் தெருவில், சொரி சுரை கவரும் நெய் வழிபு உராலின் – எண்ணெயைச் சொரியும் திரிக்குழாய் தான் ஏற்றுக் கொண்ட எண்ணெய் பரவுவதால், பாண்டில் விளக்குப் பரூஉச்சுடர் அழல – பாண்டில் விளக்கின் பருத்த திரி எரிய, நன் நுதல் விறலியர் ஆடும் – அழகிய நெற்றியையுடைய விறலியர் ஆடும், தொல் நகர் வரைப்பின் அவன் உரை ஆனாவே – பழைய நகரின் எல்லையில் அவனைப் புகழும் புகழுரைகள் நீங்காது நிலவின (ஆனாவே – ஏகாரம் அசைநிலை)

பதிற்றுப்பத்து 52, *சிறு செங்குவளை*, பாடியவர்: காக்கை பாடினியார் நச்செள்ளையார், பாடப்பட்டவன்: சேர மன்னன் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன், துறை: குரவை நிலை, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

கொடி நுடங்கு நிலைய கொல் களிறு மிடைந்து,
வடி மணி நெடுந்தேர் வேறு புலம் பரப்பி,
அருங்கலந் தாண இயர் நீர்மிசை நிவக்கும்
பெருங்கலி வங்கம் திசை திரிந்தாங்கு,
மை அணிந்து எழுதரும் ஆயிரம் பஃறோல்  5
மெய் புதை அரணம் எண்ணாது எஃகு சுமந்து,
முன் சமத்து எழுதரும் வன்கண் ஆடவர்
தொலையாத் தும்பை தெவ்வழி விளங்க,
உயர் நிலை உலகம் எய்தினர் பலர் பட,
நல் அமர்க் கடந்த நின் செல் உறழ் தடக்கை,  10
இரப்போர்க்குக் கவிதல் அல்லதை இரைஇய
மலர்பு அறியா எனக் கேட்டிகும், இனியே,
சுடரும் பாண்டில் திருநாறு விளக்கத்து
முழா இமிழ் துணங்கைக்குத் தழூஉப்புணை ஆகச்
சிலைப்புவல் ஏற்றின் தலைக்கை தந்து நீ  15
நளிந்தனை வருதல் உடன்றனள் ஆகி,
உயவும் கோதை ஊரல் அம் தித்தி
ஈர் இதழ் மழைக்கண் பேர் இயல் அரிவை,
ஒள் இதழ் அவிழ் அகம் கடுக்கும் சீறடிப்
பல் சில கிண்கிணி சிறு பரடு அலைப்பக்  20
கொல் புனல் தளிரின் நடுங்குவனள் நின்று, நின்
எறியர் ஓக்கிய *சிறு செங்குவளை*
ஈஎன இரப்பவும் ஒல்லாள், “நீ எமக்கு
யாரையோ” எனப் பெயர்வோள் கைஅதை
கதுமென உருத்த நோக்கமோடு அது நீ  25
பாஅல் வல்லாய் ஆயினை பாஅல்
யாங்கு வல்லுநையோ? வாழ்க நின் கண்ணி,
அகல் இரு விசும்பில் பகல் இடம் தரீஇயர்,
தெறு கதிர் திகழ்தரும் உருகெழு ஞாயிற்று
உருபு கிளர் வண்ணம் கொண்ட  30
வான் தோய் வெண்குடை வேந்தர் தம் எயிலே.

குறிப்பு:  ஐங்குறுநூறு 400 – மள்ளர் அன்ன மரவம் தழீஇ மகளிர் அன்ன ஆடு கொடி நுடக்கும்.  இரா.  இராகவையங்கார் உரை – குறுந்தொகை 31ம் பாடல் – மகளிர் தம் ஆடவரைத் தழுவி ஆடும் இடமாதலால் மாண்டக் கோனை ஆண்டுந் தேடியது கூறினார்.  பெருங்கலி வங்கம் (4) – பெரிய ஆரவாரத்தையுடைய கப்பல்கள், அருள் அம்பலவாணர் உரை – பெரிய வலிமையையுடைய மரக்கலங்கள்.  பலர் பட (9) – ஒளவை துரைசாமி உரை- பகைவர் பலர் உயிர் இழந்தனர், அருள் அம்பலவாணர் உரை – பலர் உயிர் இழந்தனர்.  அலைப்ப (24) – ஒளவை துரைசாமி உரை – ஒலிக்க, அருள் அம்பலவாணர் உரை – பரட்டை வருத்த.  யாரையோ (24) – இரா. வேங்கடாசலம் பிள்ளை, ந. மு. வேங்கடசாமி நாட்டார் உரை (அகநானூறு 46ம் பாடலின் உரையில் கூறியது) ஐகாரம் முன்னிலைக்கண் வந்தது, சாரியையுமாம்.  தட – தடவும் கயவும் நளியும் பெருமை (தொல்காப்பியம், உரியியல் 24).  உயவும் கோதை (17) – ஒளவை துரைசாமி உரை – அசைகின்ற மாலை, உயவுதல் ஈண்டு அசைதல் மேற்று, அருள் அம்பலவாணர் உரை – வருந்தும் மாலை, ஈண்டு அசைதல் மேற்று.

பொருளுரை:  பிற நாடுகளிலிருந்து அரிய பொருட்களைக் கொண்டுவரும் பொருட்டுக் கடலின் மீது உயர்ந்து செல்லும் பெரிய ஆரவாரத்தையுடைய கப்பல்கள், செல்லும் திசைகளில் திரிந்தாற்போல, கொடிகள் அசையும் நிலையையுடைய போர் யானைகளை செறிந்து, வடித்த மணியுடைய உயர்ந்த தேரை வேறு பகைப்புலத்தில் பரப்பி, முகிலைப்போலக் கருமையுடன் எழும் கரிய பெரிய கேடயங்களுடன் வேலை ஏந்திக்கொண்டு, போரின் முன்னணியில் நின்று பொருதலை விரும்பி, உடலை மூடும் கவசத்தை எண்ணாது செல்லும் வலிமையுடைய போர் வீரர்கள், தோற்றுப் போகாமைக்கு ஏற்ற தும்பை மலர் மாலை அணிந்து பகைவர் தானை நடுவே நுழைந்து விளங்கிப் போரிட்டதால், பலர் உயிர் இழந்து மேலுலகம் அடைந்தனர்.  இவ்வாறு நல்ல போரில் வெற்றி அடைந்த இடியினின்றும் மாறுப்பட்ட உன்னுடைய பெரிய கைகள் உன்னிடம் உதவி வேண்டி வருபவர்களுக்குக் கொடுப்பதை அன்றிப் பிறரிடம் இரத்தற் பொருட்டு விரியாது என்பதை அறிந்தோம்.

இப்பொழுது, செல்வம் தோன்றும் ஒளிரும் பாண்டில் விளக்கின் ஒளியில், முழவு முழங்க, ஆடும் துணங்கை ஆட்டத்திற்கு, கைக் கோத்துக் கொள்ளும் புணையாக, முழங்குதலையுடைய ஏற்றினைப் போல, முதற்கை கொடுத்து, பிற மகளிருடன் நீ நெருங்கி ஆடுவதால் சினந்து, அசைகின்ற மாலையையும், பரவிய தேமலையும், குளிர்ந்த இமைகள் பொருந்திய ஈரமான கண்களையுடைய உன் மனைவியாகிய இளம் பெண், உன்னுடன் ஊடலுற்று, ஒளியுடைய இதழுடைய மலர் போன்ற சிறிய அடிகள் மீதுள்ள அவளுடைய பல மணிகளை உள்ளீடாகக் கொண்ட சிலம்பு ஒலிக்க, கரையை அழிக்கும் ஆற்றின் கரையில் உள்ள தளிரைப் போல் அவள் நடுங்கி நின்று, உன் மேல் எறிவதற்காக அவள் ஓங்கிய சிறு செங்குவளை மலரை நீ தா எனக் கேட்கவும் ஒத்துக்கொள்ளாள். “நீ எனக்கு யார்” எனக் கூறி நகர்வோள் கையிலிருந்து, சட்டெனச் சினம் கொண்ட பார்வையுடன் , மலரை அவளிடமிருந்து நின்பால் பற்றிக்கொள்ளத் திறமை இல்லாதவன் ஆயினை நீ.

அகன்ற பெரிய வானில், பகலுக்கு இடம் தரும் பொருட்டு, சுடுகின்ற கதிர்களைப் பரப்பி ஒளிரும் கதிரவனின் உருவத்தையும் விளங்குகின்ற தன்மையும் கொண்ட வான் அளவு உயர்ந்த வெண்குடை வேந்தர்களின் கோட்டைகளை நின்பால் கவர்ந்து கொள்ள எவ்வாறு வல்லமை உடையவனோ? உன் கண்ணி வாழ்வதாக!

சொற்பொருள்:   கொடி நுடங்கு நிலைய கொல் களிறு மிடைந்து – கொடிகள் அசையும் நிலையையுடைய போர் யானைகள் செறிந்து திரிந்து, வடி மணி நெடுந்தேர் வேறு புலம் பரப்பி – வடித்த மணியுடைய உயர்ந்த தேரை வேறு பகைப்புலத்தில் பரப்பி, அருங்கலம் தரீஇயர் – பிற நாடுகளிலிருந்து அரிய பொருட்களைக் கொண்டுவரும் பொருட்டு, நீர்மிசை நிவக்கும் – கடலின் மீது உயர்ந்து செல்லும், பெருங்கலி வங்கம் – பெரிய ஆரவாரத்தையுடைய கப்பல்கள், திசை திரிந்தாங்கு – செல்லும் திசைகளில் திரிந்தாற்போல, மை அணிந்து எழுதரும் மா இரு பல் தோல் – முகிலைப்போல கருமையுடன் எழும் கரிய பெரிய கேடயங்கள், மெய் புதை அரணம் எண்ணாது – உடலை மூடும் கவசத்தை எண்ணாது, எஃகு சுமந்து – வேலை சுமந்து, முன் சமத்து – போர் முனையில், எழுதரும் வன்கண் ஆடவர் – செல்லும் வலிமையுடைய வீரர்கள், தொலையாத் தும்பை – தோற்றுப்போகாமைக்கு ஏற்ற தும்பை மலர் மாலை, தெவ்வழி விளங்க – பகைவர் தானை நடுவே நுழைந்து விளங்கிப் போரிட்டதால், உயர் நிலை உலகம் எய்தினர் பலர் பட – பகைவர் பலர் உயிர் இழந்து மேலுலகம் அடைந்தனர், நல் அமர்க் கடந்த நின் செல் உறழ் தடக்கை – நல்ல போரில் வெற்றி அடைந்த இடியினின்றும் மாறுப்பட்ட பெரிய கைகளையுடைய நீ, இரப்போர்க்குக் கவிதல் அல்லதை – உன்னிடம் உதவி வேண்டி வருபவர்களுக்கு கொடுப்பதை அன்றி, இரைஇய மலர்பு அறியா எனக் கேட்டிகும் – பிறரிடம் இரத்தற் பொருட்டு விரியாது என்பதை அறிந்தோம், இனியே – இப்பொழுது, சுடரும் பாண்டில் திருநாறு விளக்கத்து – செல்வம் தோன்றும் ஒளிரும் பாண்டில் விளக்கின் ஒளியில், முழா இமிழ் துணங்கைக்கு – முழவு முழங்க ஆடும் துணங்கை ஆட்டத்திற்கு, தழூஉப்புணை ஆக – கைக் கோத்துக்கொள்ளும் புணையாக, சிலைப்புவல் ஏற்றின் – முழங்குதலையுடைய ஏற்றினைப் போல, தலைக்கை தந்து – முதற்கை கொடுத்து, நீ நளிந்தனை வருதல் உடன்றனள் ஆகி – மகளிருடன் நீ நெருங்கி ஆடுவதால் அவள் சினந்து, உயவும் கோதை – அசைகின்ற மாலை, ஊரல் அம் தித்தி – பரவிய தேமல், ஈர் இதழ் மழைக்கண் பேர் இயல் அரிவை – குளிர்ந்த இமைகள் பொருந்திய ஈரமான கண்களையுடைய இளம் பெண், ஒள் இதழ் அவிழ் அகம் கடுக்கும் சீறடி – ஒளியுடைய இதழுடைய மலர் போன்ற சிறிய அடிகள், பல் சில கிண்கிணி – பல மணிகளையுடைய சிலம்பு, சிறு பரடு அலைப்ப – சிறிய பரட்டின் கண் ஒலிப்ப, அவளுடைய கொல் புனல் தளிரின் நடுங்குவனள் நின்று – கரையை அழிக்கும் ஆற்றின் கரையில் உள்ள தளிரைப் போல் நடுங்கி நின்று (தளிரின் – இன் ஒப்புப்பொருளில் வந்தது, ஐந்தாம் வேற்றுமை உருபு), நின் எறியர் ஓக்கிய *சிறு செங்குவளை* ஈ என இரப்பவும் ஒல்லாள் – உன் மேல் எறிவதற்காக அவள் ஓங்கிய சிறு செங்குவளை மலரை நீ தா எனக் கேட்கவும் ஒத்துக்கொள்ளாள், “நீ எமக்கு யாரையோ” எனப் பெயர்வோள் – நீ எனக்கு யார் எனக் கூறி நகர்வோள், கையதை – கையிலிருந்து, கதுமென உருத்த நோக்கமோடு – சட்டென சினம் கொண்ட பார்வையுடன், அது நீ பாஅல் வல்லாய் ஆயினை – அவளிடமிருந்து நின்பால் அதை எடுத்துக்கொள்ள நீ திறமை இல்லாதவன் ஆயினை, பாஅல் யாங்கு வல்லுநையோ – நின்பால் கவர்ந்து கொள்ள எவ்வாறு வல்லமை உடையவனோ, வாழ்க நின் கண்ணி – உன் கண்ணி வாழ்வதாக, அகல் இரு விசும்பில் – அகன்ற பெரிய வானில், பகல் இடம் தரீஇயர் – பகலுக்கு இடம் தரும் பொருட்டு, தெறு கதிர் திகழ்தரும் உருகெழு ஞாயிற்று – சுடுகின்ற கதிர்களை பரப்பி ஒளிரும் கதிரவனின், உருபு கிளர் வண்ணம் கொண்ட – உருவத்தையும் விளங்குகின்ற தன்மையும் கொண்ட, வான் தோய் – வான் அளவு உயர்ந்த வெண்குடை வேந்தர் தம் எயிலே – வான் அளவு உயர்ந்த வெண்குடை உடைய வேந்தரின் கோட்டைகள்

பதிற்றுப்பத்து 56பாடியவர்காக்கை பாடினியார் நச்செள்ளையார், பாடப்பட்டோன் சேர மன்னன் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன், *வேந்து மெய்ம் மறந்த வாழ்ச்சி*, துறைஒள் வாள் அமலை, தூக்குசெந்தூக்கு, வண்ணம்ஒழுகு வண்ணம்

விழவு வீற்று இருந்த வியல் உள் ஆங்கண்,
கோடியர் முழவின் முன்னர், ஆடல்
வல்லான் அல்லன், வாழ்க அவன் கண்ணி,
வலம்படு முரசம் துவைப்ப வாள் உயர்த்தி,
இலங்கும் பூணன், பொலங்கொடி உழிஞையன்,  5
மடம் பெருமையின் உடன்று மேல் வந்த
*வேந்து மெய்ம்மறந்த வாழ்ச்சி*
வீந்து உகு போர்க்களத்து ஆடும் கோவே.

பொருளுரை:  விழாக்கள் சிறப்பாக எடுக்கப்பட்ட அகன்ற ஊரில் கூத்தர்களின் முழவு ஓசைக்கு ஏற்ப ஆடும் தொழிலில் வல்லவன் இல்லை சேர மன்னன் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன்.  அவன் சூடிய மலர்ச்சரம் நீடு வாழ்வதாக!

வெற்றி முரசம் ஒலிக்க வாளை உயர்த்தி, ஒளியுடைய அணிகலன்களை அணிந்து,  பொன்னால் செய்த உழிஞைக் கொடியைச் சூடி,  அறியாமையின் மிகுதியால் வெகுண்டு, தன் மேல் வந்த பகை வேந்தர்கள் தங்கள் உடம்பை மறந்ததால் வந்த வெற்றிச் செல்வத்தையுடைய, பகைவர்கள் வீழும் போர்க்களத்தில்,  ஆடுவான் மன்னன்!

குறிப்பு:  வாழ்ச்சி (7) – அருள் அம்பலவாணர் உரை – வெற்றிச் செல்வத்தையுடைய, ஒளவை துரைசாமி உரை – துறக்கத்தே வாழ்வு பெறுதலால்.

சொற்பொருள்:  விழவு வீற்று இருந்த – விழாக்கள் சிறப்பாக எடுக்கப்பட்ட,  வியல் உள் ஆங்கண் – அகன்ற இடத்தில், கோடியர் முழவின் முன்னர் – கூத்தர்களின் முழவு ஓசைக்கு ஏற்ப,  ஆடல் வல்லான் அல்லன் – ஆடும் தொழிலில் வல்லவன் இல்லை,  வாழ்க அவன் கண்ணி – அவன் சூடிய கண்ணி நீடு வாழ்வதாக,  வலம்படு முரசம் துவைப்ப – வெற்றி முரசம் ஒலிக்க,  வாள் உயர்த்தி – வாளை உயர்த்தி,  இலங்கும் பூணன் –  ஒளியுடைய அணிகலன்களை அணிந்தவன், பொலங்கொடி உழிஞையன் – பொன்னால் செய்த உழிஞைக் கொடியைச் சூடி,  மடம் பெருமையின் – அறியாமையின் மிகுதியால்,  உடன்று மேல் வந்த – வெகுண்டு தன் மேல் வந்த, வேந்து  – பகை வேந்தர்கள், மெய்ம்மறந்த வாழ்ச்சி – தங்கள் உடம்பை மறந்ததால் வந்த வெற்றிச் செல்வம், வீந்து உகு – பட்டு வீழும், போர்க்களத்து ஆடும் கோவே – போர்க்களத்தில் ஆடும் மன்னன்

பதிற்றுப்பத்து 61, பாடியவர் – கபிலர்,  பாடப்பட்டோன் – செல்வக்கடுங்கோ வாழியாதன் ,*புலாஅம் பாசறை*, துறை: காட்சி வாழ்த்து, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

பலாஅம் பழுத்த பசும் புண் அரியல்
வாடை துரக்கும் நாடு கெழு பெரு விறல்,
ஓவத்து அன்ன வினை புனை நல் இல்,
பாவை அன்ன நல்லோள் கணவன்,
பொன்னின் அன்ன பூவின் சிறி இலைப்  5
புன்கால் உன்னத்துப் பகைவன், என் கோ,
புலர்ந்த சாந்தின், புலரா ஈகை,
மலர்ந்த மார்பின், மா வண் பாரி,
முழவு மண் புலர, இரவலர் இனைய,
வாராச் சேண் புலம் படர்ந்தோன், அளிக்கென  10
இரக்கு வாரேன், எஞ்சிக் கூறேன்,
ஈத்தது இரங்கான், ஈத்தொறும் மகிழான்,
ஈத்தொறும் மா வள்ளியன் என நுவலும் நின்
நல் இசை தரவந்திசினே, ஒள் வாள்
உரவுக் களிற்றுப் *புலாஅம் பாசறை15
நிலவின் அன்ன வெள் வேல் பாடினி
முழவின் போக்கிய வெண் கை
விழவின் அன்ன, நின் கலி மகிழானே.

குறிப்பு:  பாவை அன்ன (4) – அருள் அம்பலவாணர் உரை – கொல்லிப் பாவை போன்ற.  ஒளவை துரைசாமி உரை – பாவை போன்ற.  உன்னத்துப் பகைவன் (6) – ஒளவை துரைசாமி உரை – உன்ன மரம் போர் வீரர் நிமித்தம் காண நிற்கும் மரம்.  காண்பார்க்கு வெற்றி எய்துவதாயின் தழைத்தும் தோல்வி எய்துவதாயின் கரித்தும் காட்டும் என்ப.  அது கரித்து காட்டிய வழியும் அஞ்சாது அறமும் வலியும் துணையாகப் பொருது வெற்றி எய்தும் வேந்தன் என்றதற்கு ‘உன்னத்துப் பகைவன்’ என்றார்.  தான் எய்துவது தோல்வி என்று உன்ன மரம் காட்டவும் காணாது, பொருது வென்றி எய்தி உன்னத்தின் நிமித்தத்தைக் கெடுத்தல் பற்றிப் பகைவன் என்பாராயினர் என்க. இரக்கு (11) – பழைய உரை – இரக்கென்றது தன்மை வினை.  எஞ்சிக் கூறேன் (11) – ஒளவை துரைசாமி உரை – குன்றவும் மிகை படவும் கூற மாட்டேன், அருள் அம்பலவாணர் உரை – உண்மையின் எல்லையைக் கடந்து பொய்யே புகழ்ந்து சொல்லேன்.  சின் – மியா இக மோ மதி இகும் சின் என்னும் ஆவயின் ஆறும் முன்னிலை அசைச்சொல் (தொல்காப்பியம்.  சொல்லதிகாரம்.  இடையியல் 26, சின் என்பது இசின் என்பதன் முதற்குறை – ச. பாலசுந்தரம் உரை), அவற்றுள், இகுமும் சின்னும் ஏனை இடத்தொடும் தகு நிலை உடைய என்மனார் புலவர் (தொல்காப்பியம், இடையியல் 27).

பொருளுரை:  பலா மரத்தில் பழுத்து வெடித்த பழத்திலிருந்து ஒழுகும் சாற்றினை வாடைக் காற்று எறியும் பறம்பு நாட்டின் கோமான், பெரிய வெற்றியுடையவன், ஓவியத்தைப் போன்ற வேலைப்பாடமைந்த நல்ல மனையில் உள்ள பாவையைப் போன்ற நல்ல அழகுடைய பெண்ணின் கணவன், பொன்னைப் போன்ற பூக்களையும் சிறிய இலைகளையும் புல்லிய அடிப்பகுதியையையும் உடைய உன்ன மரத்திற்குப் பகைவனான என் மன்னன், உலர்ந்தச் சந்தனத்தையுடைய அகன்ற மார்பையும் குன்றாத வள்ளன்மையுடைய பாரி. முழவின் மார்ச்சனை மண் புலர, பரிசிலர் வருந்த, திரும்பி வர முடியாத தொலைவில் உள்ள சாவிற்குச் சென்று விட்டான். எனக்கு அளிப்பாயாக என்று கேட்க வரவில்லை நான். உன் புகழை மிகைப்படவும் குறைவாகவும் கூற மாட்டேன். “ஈதலால் பொருள் செலவானது என்று மனம் இரங்குவான் இல்லை. ஈதலால் புகழ் மிகுவதால் மகிழ மாட்டான். ஈயும் பொழுதெல்லாம் மிகுந்த வள்ளன்மையுடையவன்” என்று கூறப்படும் உன் புகழ் எம்மை ஈர்ப்ப, நான் உன்னிடம் வந்தேன், ஒளியுடைய வாளினையும் வலிமையான களிற்று யானைகளையுமுடைய புலால் நாற்றமுடைய பாசறைக்கு. நிலவைப் போன்ற ஒளியுடைய வேலைச் சிறப்பித்துப் பாடும் பாடினி முழவின் தாளத்திற்கேற்ப வெறுங்கையை அசைத்துப் பாடும் உன்னுடைய ஆரவாரம் மிக்கத் திருவோலக்கத்தின்கண்.

சொற்பொருள்:   பலாஅம் பழுத்த பசும் புண் அரியல் – பலா மரத்தில் பழுத்து வெடித்த பழத்திலிருந்து ஒழுகும் சாறு, வாடை துரக்கும் – வாடைக் காற்று எறியும், நாடு கெழு பெரு விறல் – பறம்பு நாட்டின் பெரிய வெற்றியுடையவன், ஓவத்து அன்ன வினை புனை நல் இல் – ஓவியத்தைப் போன்ற வேலைப்பாடமைந்த நல்ல மனை, பாவை அன்ன நல்லோள் கணவன் – பாவையைப் போன்ற நல்ல அழகுடைய பெண்ணின் கணவன், பொன்னின் அன்ன பூவின் சிறி இலைப் புன்கால் உன்னத்துப் பகைவன் – பொன்னைப் போன்ற பூக்களையும் சிறிய இலைகளையும் புல்லிய அடிப்பகுதியையையும் உடைய உன்ன மரத்திற்கு பகைவன் (பொன்னின் – இன் சாரியை), என் கோ – என் மன்னன், புலர்ந்த சாந்தின் புலரா ஈகை மலர்ந்த மார்பின் மா வண் பாரி – உலர்ந்த சந்தனத்தையுடைய அகன்ற மார்பையும் குன்றாத வள்ளன்மையுடைய பாரி, முழவு மண் புலர – முழவின் மார்ச்சனை மண் புலர, இரவலர் இனைய – பரிசிலர் வருந்த, வாராச் சேண் புலம் படர்ந்தோன் – திரும்பி வர முடியாத தொலைவிற்குச் சென்று விட்டான், அளிக்கென இரக்கு வாரேன் – எனக்கு அளிப்பாயாக என்று கேட்க வரவில்லை நான், எஞ்சிக் கூறேன் – உன் புகழை மிகைப்படவும் குறைவாகவும் கூற மாட்டேன், ஈத்தது இரங்கான் – ஈதலால் பொருள் செலவானது என்று மனம் இரங்குவான் இல்லை, ஈத்தொறும் மகிழான் – ஈதலால் புகழ் மிகுவதால் மகிழ மாட்டான், ஈத்தொறும் மா வள்ளியன் என நுவலும் நின் நல் இசை – ஈயும் பொழுதெல்லாம் மிகுந்த வள்ளன்மையுடையவன் என்று கூறப்படும் உன் புகழ், தரவந்திசினே – எம்மை ஈர்ப்ப நான் வந்தேன், ஒள் வாள் உரவுக் களிற்றுப் புலாஅம் பாசறை – ஒளியுடைய வாட்களையும் வலிமையான களிற்று யானைகளையுமுடைய புலால் நாற்றமுடைய பாசறை, நிலவின் அன்ன – நிலவைப் போன்ற, வெள் வேல் பாடினி – ஒளியுடைய வேலைச் சிறப்பித்துப் பாடும் பாடினி, முழவின் போக்கிய வெண் கை விழவின் அன்ன நின் கலி மகிழானே – முழவின் தாளத்திற்கேற்ப வெறுங்கையை அசைத்துப் பாடும் உன்னுடைய ஆரவாரம் மிக்க திருவோலக்கத்தின்கண் (விழவின் – இன் சாரியை)

பதிற்றுப்பத்து 87, பாடியவர் – பெருங்குன்றூர்கிழார்,  பாடப்பட்டோன் – இளஞ்சேரல் இரும்பொறை, *வெண் தலைச் செம் புனல்*, துறை: விறலியாற்றுப்படை, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்

சென்மோ பாடினி! நன்கலம் பெறுகுவை,
சந்தம் பூழிலொடு பொங்கு நுரை சுமந்து
தெண் கடல் முன்னிய *வெண் தலைச் செம் புனல்*
ஒய்யும் நீர் வழிக் கரும்பினும்,
பல் வேல் பொறையன் வல்லனால், அளியே.  5

பொருளுரை:   செல்லுவாயாகப் பாடும் பெண்ணே! பொறையனிடம் நல்ல அணிகளை நீ பெறுவாய். சந்தனக் கட்டைகளோடும் அகில் கட்டைகளோடும், பொங்கும் நுரையைச் சுமத்துக் கொண்டு, தெளிந்த கடலை நோக்கிச் செல்லும் வெள்ளை நுரையையுடைய சிவந்த வெள்ளத்தின் நீரைக் கடப்பதற்குப் புணையாக உதவும் வேழக் கரும்பைக் காட்டிலும், பல வேற்படைகளையுடைய பொறையன், அளிக்க வல்லவன்.

குறிப்பு:  கரும்பினும் (4) – ஒளவை துரைசாமி உரை – வேழக்கரும்பைக் காட்டிலும், அருள் அம்பலவாணர் உரை – கருப்பந்தெப்பத்தினும், உ. வே. சாமிநாதையர் உரை – கரும்பென்றது கருப்பந்தெப்பத்தினை.  ஒளவை துரைசாமி உரை – வேழப்புணை ஆற்று நீரைக் கடத்தற்குத் துணையாவது அல்லது கடந்த பின்னும் துணையாவதில்லை.  பொறையன் நினது இவ்வறுமைத் துன்பத்தைக் கடத்தற்குத் துணையாம் பெருவளம் நல்குவதே அன்றி, அத் துன்பமின்றி இனிது இருக்குங்காலத்தும் வழங்கி அருள்வர் என்றார். அகநானூறு 6 – வேழ வெண்புணை

சொற்பொருள்:  சென்மோ – செல்லுவாயாக (மோ – முன்னிலையசை), பாடினி – பாடும் பெண்ணே, நன்கலம் பெறுகுவை – நல்ல அணிகள் பெறுவாய், சந்தம் பூழிலொடு – சந்தனக் கட்டைகளோடும் அகில் கட்டைகளோடும், பொங்கு நுரை சுமந்து – பொங்கும் நுரையைச் சுமத்துக் கொண்டு, தெண் கடல் முன்னிய – தெளிந்த கடலை நோக்கிச் செல்லும், வெண்தலைச் செம்புனல் – வெள்ளை நுரையையுடைய சிவந்த வெள்ளம், ஒய்யும் நீர் வழிக் கரும்பினும் – நீரைக் கடப்பதற்கு புணையாக உதவும் வேழக் கரும்பைக் காட்டிலும், பல் வேல் பொறையன் – பல வேற்படைகளையுடைய பொறையன், வல்லனால் அளியே – அளிக்க வல்லவன் (அளியே – ஏகாரம் அசைநிலை)