மடல் ஏறுதல்

தலைவியின் மேல் காதல் கொண்ட தலைவன், அவளை அடைவதற்காக, பனை மடலால் செய்யப்பட்டக் குதிரையின் மீது ஏறி, ஊர்ச் சிறுவர்கள் அதை இழுக்க, தெருவில் செல்வான்.  வேடிக்கை பார்க்க வரும் ஊராரிடம் தன் குறையைக் கூறுவான்.

ஆவிரை மலர் மாலையையோ அல்லது எருக்கம் பூ மாலையையோ அல்லது எலும்பினால் செய்த மாலையையோ தன் கழுத்தில் அணிந்துக் கொள்வான்.  மடல் குதிரையின் கழுத்தில் மணியைத் தொங்க விடுவான்.  அதன் உடம்பைச் சுற்றித் துணியைக் கட்டுவான் (கச்சை).  மயில் இறகினால் அதை அலங்கரிப்பான்.  பூளை, உழிஞை, ஆவிரை ஆகியவற்றின் மலர்களால் பிணிக்கப்பட்ட மாலைகளைக் குதிரைக்கு அணிவிப்பான்.

மடல் பாடல்கள்:

குறுந்தொகை – (5) 14, 17, 32, 173, 182
நற்றிணை – (5) 146, 152, 220, 342, 377
கலித்தொகை – (6) 58, 61, 138, 139, 140,141

குறுந்தொகை 14, தொல்கபிலர், குறிஞ்சித் திணை – தலைவன் சொன்னது, தோழி கேட்கும்படி 

பாடல் பின்னணி தோழியால் குறை மறுக்கப்பட்ட தலைவன், அத்தோழி கேட்பக் கூறியது.

அமிழ்து பொதி செந்நா அஞ்ச வந்த
வார்ந்து இலங்கு வை எயிற்றுச் சின்மொழி அரிவையைப்
பெறுக தில் அம்ம யானே! பெற்றாங்கு
அறிக தில் அம்ம, இவ்வூரே! மறுகில்
‘நல்லோள் கணவன் இவன்’ எனப்
பல்லோர் கூற, யாஅம் நாணுகம் சிறிதே.

பொருளுரை:  அமிழ்தத்தைப் பொதிந்து வைத்தாற் போன்ற சிவந்த  நாக்கு அஞ்சுமாறு நேராக விளங்கும் கூர்மையான பற்களையுடைய சில மொழிகளைப் பேசும் என் தலைவியை யான் (மடலேறி) பெறுவேனாக.  நான் அவளைப் பெற்ற பின், இந்த ஊரார் அதை அறிந்து கொள்ளட்டும்.  அவ்வாறு, ஊரார் பலரும் தெருவில் ‘நல்லோள் கணவன் இவன்’ என்று கூறும் போது, நாங்கள் சிறிது நாணமடைவோம்.

குறிப்பு:  நாணுகம் (6) – உ. வே. சாமிநாதையர் உரை – யாம் என்பது தலைவியையும் உடன்படுத்தி.  தில் – காலம் பற்றி வந்த இடைச்சொல், சிறிதே – ஏகாரம் அசை நிலை.  வை – வையே கூர்மை (தொல்காப்பியம், உரியியல் 91).  வார்– வார்தல் போகல் ஒழுகல் மூன்றும் நேர்பும் நெடுமையும் செய்யும் பொருள (தொல்காப்பியம், உரியியல் 21).

சொற்பொருள்: அமிழ்து பொதி – அமிழ்தத்தைப் பொதிந்து வைத்தாற் போன்று (இனிமையான சொற்களைப் பேசும்), செந்நா- சிவந்த நாக்கு, அஞ்ச வந்த – அஞ்சுவதற்குக் காரணமான, வார்ந்து இலங்கு – நேராக விளங்கும், வை எயிற்று – கூர்மையான பற்களையுடைய, சின்மொழி அரிவையை- சில சொற்களைப் பேசும்  பெண்ணை, (என் தலைவியை), பெறுக – பெறுவேனாக, தில் – ஓர் அசைச் சொல், அம்ம – ஓர் அசைச் சொல், பெற்றாங்கு – பெற்ற பின், அறிக  – அறிந்து கொள்ளட்டும்,  தில் – ஓர் அசைச் சொல், அம்ம – ஓர் அசைச் சொல், இவ்வூரே- இவ்வூரவர், மறுகில் – தெருவில், நல்லோள் கணவன் – நல்ல பெண்ணின் கணவன், இவன் என – இவன்  என்று, பல்லோர் கூற – பலரும் சொல்ல, யாஅம் – நானும் தலைவியும், நாணுகம் – நாணமடைவோம், சிறிதே- சிறிது

குறுந்தொகை 32,  அள்ளூர் நன்முல்லையார், குறிஞ்சித் திணை – தலைவன் தோழியிடம் சொன்னது  

பாடல் பின்னணி தோழியிடம் தன்னுடைய குறையைக் கூறி அவள் உடன்படாததை அறிந்த தலைவன், அவளுடைய உதவியை விரும்பி, அவளை இரந்து நின்றான்.

காலையும், பகலும், கை அறு மாலையும்,
ஊர் துஞ்சு யாமமும், விடியலும் என்றி,
பொழுதிடை தெரியின், பொய்யே காமம்
மா என மடலோடு மறுகில் தோன்றித்
தெற்றெனத் தூற்றலும் பழியே,
வாழ்தலும் பழியே, பிரிவுதலை வரினே.

பொருளுரை:  காலையும், பகலும், செயலற்று இருக்கும் மாலையும், ஊர் தூங்கும் நடு இரவும், விடியும் பொழுதும், இடையே உள்ள பொழுதும், தெளிவாகத் தெரிந்தால் அத்தகையோருடைய காதல் உண்மையானது இல்லை.  பனை மடல் குதிரையில் ஏறி நான் தெருவில் சென்றால் கண்டிப்பாக இழிவான பேச்சும், பழியும் ஏற்படும்.  இந்த நிலையில், அவளிடமிருந்து பிரிந்தால், வாழ்வதும் பழி தான்.

குறிப்பு:   இப் பொழுது இடை  (3) – தமிழண்ணல் உரை – இப்பொழுதுகள் இடையே தெரியின், உ. வே. சாமிநாதையர் உரை – இச் சிறுபொழுதுகள் இடையே தோற்றுமாயின், இடை வேறுபாடுமாம், இரா. இராகவையங்கார் உரை – இப்பொழுதுகளின் செவ்வி, பொழுதும் இடமும் என்பதும் பொருந்தும்.  பொய்யே காமம் (3) – உ. வே. சாமிநாதையர் உரை – காமம் உண்மைக் காமம் அன்று,  தமிழண்ணல் உரை – காமம் என்பது பொய்யே, இரா. இராகவையங்கார் உரை – காமம் பொய்யே, திருமாளிகைச் செளரிப் பெருமாளரங்கன் உரை – பொய்யாகுமோ காமம், பொய்யே என்பதில் ஏகாரம் வினா.  பொய்யே – ஏகாரம் தேற்றப்பொருளில் வந்தது, பழியே, வரினே – ஏகாரங்கள் அசை நிலைகள்.

சொற்பொருள்:  காலையும் பகலும் – காலையும் பகலும், கை அறு மாலையும் – செயலற்று இருக்கும் மாலையும், ஊர் துஞ்சு யாமமும் – ஊர் உறங்கும் நடு இரவிலும்,  விடியலும் – விடியும் பொழுதும், என்றி பொழுதிடை – என்ற இடையில் உள்ள பொழுதிலும்,  தெரியின் – தெளிவாகத் தெரிந்தால், பொய்யே காமம் – காதல் உண்மையானது இல்லை, மா என மடலோடு – குதிரையின் மடலுடன்,  மறுகில் தோன்றி –  தெருவில் தோன்றி, தெற்றென – தெளிவாக, தூற்றலும் – வம்புப் பேச்சும், பழியே –  பழியே,  வாழ்தலும் பழியே – வாழ்வதும் பழி தான்,  பிரிவுதலை வரினே – நான் அவளிடமிருந்து பிரிந்தால்

குறுந்தொகை 182, மடல் பாடிய மாதங்கீரனார், குறிஞ்சித் திணை – தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது, தோழி கேட்கும்படியாக

பாடல் பின்னணி தன்னுடைய குறையைத் தோழி மறுத்ததால், “தலைவியும் இரங்கவில்லை.  தோழியும் உடன்படவில்லை.  ஆகவே நான் மடல் ஏறுவேன்” என்று தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது.

விழுத்தலைப் பெண்ணை விளையல் மாமடல்
மணி அணி பெருந்தார் மரபின் பூட்டி,
வெள் என்பு அணிந்து, பிறர் எள்ளத் தோன்றி,
ஒரு நாள் மருங்கில் பெரு நாண் நீக்கித்
தெருவின் இயலவும் தருவது கொல்லோ,
கலிழ்ந்து அவிர் அசை நடைப் பேதை
மெலிந்திலள் நாம் விடற்கு அமைந்த தூதே?

பொருளுரை:  அழகுடன் விளங்கும் அசைந்த நடையையுடைய தலைவி என்மாட்டு நெஞ்சம் நெகிழவில்லை.  நான் அவளிடம் விடுவதற்கு ஏற்ற தூது, சிறந்த உச்சியையுடைய பனையின் முதிர்ந்த மடலால் செய்த குதிரைக்கு மணிகள் அணிந்த பெரிய மாலையைச் சூட்டி, வெள்ளை எலும்பினால் செய்த மாலையை நான் அணிந்துக் கொண்டு, பிறர் இகழும்படி அந்த மடல் குதிரையின் மேல் ஏறி, ஒரு நாளில் என் நாணத்தை விட்டு விட்டு தெருவில் செல்வது தான்.  அவ்வாறு சென்றால் நான் அவளை அடைய முடியுமா?

குறிப்பு:  கொல்லோ: ஓகாரம் அசை நிலை, தூதே:  ஏகாரம் – அசை நிலை.  விழு (விழுமம்) – விழுமம் சீர்மையும் சிறப்பும் இடும்பையும் (தொல்காப்பியம் உரியியல் 57).

சொற்பொருள்:  விழுத்தலைப் பெண்ணை – சிறந்த உச்சியையுடைய பனை, விளையல் மா மடல் – முதிர்ந்த பெரிய மடலால் செய்த குதிரை, மணி அணி பெருந்தார் – மணிகள் அணிந்த பெரிய மாலை, மரபின் பூட்டி – முறைப்படி அணிந்து, வெள் என்பு அணிந்து – வெள்ளை எலும்பை (மாலையை) அணிந்து, பிறர் எள்ள – பிறர் இகழ, தோன்றி – தோன்றி, ஒரு நாள் மருங்கில் – ஒரு நாளில், பெரு நாண் நீக்கி – பெரிய நாணத்தை விட்டு விட்டு, தெருவின் இயலவும் தருவது கொல்லோ – தெருவின் கண் செல்லவும் தருவதோ, கலிழ்ந்து அவிர் அசை நடைப் பேதை – அழகு ஒழுகும் விளங்கும் அசைந்த நடையையுடைய தலைவி, மெலிந்திலள் – நெஞ்சம் நெகிழ்ந்து இலள், நாம் விடற்கு அமைந்த தூதே – நாம் அவளிடம் விடுதற்கு அமைந்த தூது

குறுந்தொகை 173, மதுரைக் காஞ்சிப்புலவன், குறிஞ்சித் திணை  – தலைவன் தோழியிடம் சொன்னது
பொன் நேர் ஆவிரைப் புது மலர் மிடைந்த
பன் நூல் மாலைப் பனைபடு கலி மாப்
பூண் மணி கறங்க ஏறி, நாண் அட்டு,
அழிபடர் உள் நோய் வழி வழி சிறப்ப,
“இன்னள் செய்தது இது” என, முன் நின்று 5
அவள் பழி நுவலும் இவ்வூர்,
ஆங்கு உணர்ந்தமையின், ஈங்கு ஏகுமார் உளெனே.

பாடல் பின்னணிதலைவன் தோழியிடம் குறை இரப்ப அவள் மறுத்தாளாக, ‘இனி நான் மடலேறுவேன்’ என அவன் கூறியது.

பொருளுரை:   பொன்னைப் போன்ற ஆவிரையின் புதிய மலர்களை நெருக்கமாகப் பல நூல்களால் கட்டிய மாலையை அணிந்து, பனை மடலால் செய்த செருக்கான மடல் குதிரையின் கழுத்தில் கட்டிய மணி ஒலிக்கும்படி அதன் மீது ஏறி, நாணத்தைத் தொலைத்து, மிகுந்த துன்பத்தைத் தரும் காதல் நோய் உள்ளத்தில் மேலும் மேலும் மிகுதியாக, இவள் இவ்வாறு செய்தாள் என்று நான் கூறினால், எல்லோருக்கும் முன்னால் நின்று அவளைப் பழிக்கும் இந்த ஊர்.  அதை நான் உணர்ந்ததால், இங்கிருந்து நான் போவதற்குத் தயாராக உள்ளேன்.

குறிப்பு:  உளெனே – ஏகாரம் அசை நிலை.  அழிபடர் (4) – உ. வே. சாமிநாதையர் உரை – மிக்க துன்பம், பொ. வே. சோமசுந்தரனார் உரை – மிக்க நினைவு.

சொற்பொருள்:  பொன் நேர் ஆவிரைப் புது மலர் மிடைந்த – பொன்னைப் போன்ற ஆவிரையின் புதிய மலர்களை நெருக்கமாகக்  கட்டிய, பன் நூல் மாலை – பல நூல்களால் கட்டிய மாலை,  பனைபடு கலி மாப் பூண் மணி கறங்க ஏறி – பனை மடலால் செய்த செருக்கான குதிரைக்குக் கழுத்தில் கட்டிய மணி ஒலிக்கும்படி ஏறி,  நாண் அட்டு – நாணத்தைத் தொலைத்து, அழிபடர் – மிகுந்த துன்பம், உள் நோய் – உள்ளத்தில் உள்ள காதல் நோய், வழி வழி சிறப்ப – மேலும் மேலும் மிகுதியாக,  இன்னள் செய்தது இது என –  இவள் இவ்வாறு செய்தாள் என்று, முன் நின்று அவள் பழி நுவலும் இவ்வூர் – எல்லோருக்கும் முன்னால் நின்று பழிக்கும் இந்த ஊர், ஆங்கு உணர்ந்தமையின் – அதை நான் உணர்ந்ததால், ஈங்கு ஏகுமார் உளெனே –  இங்கிருந்து நான் போவதற்குத் தயாராக உள்ளேன்

நற்றிணை 342, மோசிகீரனார், நெய்தற் திணை – தோழி சொன்னது
“மா என மதித்து, மடல் ஊர்ந்து, ஆங்கு
மதில் என மதித்து, வெண்தேர் ஏறி,
என் வாய் நின் மொழி மாட்டேன், நின் வயின்
சேரி சேரா வருவோர்க்கு என்றும்
அருளல் வேண்டும் அன்பு உடையோய்” என 5
கண் இனிதாகக் கோட்டியும், தேரலள்,
யானே, எல் வளை, யாத்த கானல்
வண்டு உண் நறு வீ நுண்ணிதின் வரித்த
சென்னிச் சேவடி சேர்த்தின்
என் எனப் படுமோ என்றலும் உண்டே. 10

பொருளுரை:  நான் அவளிடம், “அன்புடைய தோழியே!  குதிரை என்று கருதி பனை மடலில் வந்து, காவலுடைய மதில் என்று எண்ணி கானல்நீரைத் தாண்டி, நம்முடைய தெருவிற்கு உன்னுடைய உறவை நாடி வரும் தலைவனுக்கு நீ அருள வேண்டும்.  உன்னுடைய சொற்களை நான் அவனிடம் கூற மாட்டேன்”, என்று என் தலையைச் சாய்த்து, என் கண்களினால் இனிமையை வெளிப்படுத்திக் கூறினேன்.  ஆனாலும் ஒளியுடைய வளையல்களை அணிந்த அவள் தெளிவு அடையவில்லை.  வண்டுகள் நறுமணமான மலர்களை உண்டு அவற்றை நுண்ணியக் கோலமாக உதிர்த்த வேலியை உடையக் கடற்கரைச் சோலையில், என் தலையை அவளது சிவந்த அடியில் பொருத்தி அவளிடம் கேட்டால், அவள் ஒரு வேளை சூழ்நிலையைப் பற்றிக் கேட்க வாய்ப்பு உள்ளது.

குறிப்பு:  சேரா – சேர என்பது பொருள். செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.  எதிர்மறைச் சொல்போல் காணப்படினும் உடன்பாட்டுப் பொருள் தருவது.  என் வாய் நின் மொழி மாட்டேன் (3) – ஒளவை துரைசாமி உரை – என் வாயால் நீ கூறற்குரியவற்றை கூற வல்லேனல்லேன்.  எல் – எல்லே இலக்கம் (தொல்காப்பியம், இடையியல் 21).  மடல் ஏறுதல் –  சங்க இலக்கியத்தில் மொத்தம் 16 பாடல்களில் மடல் ஏறுதல் பற்றிய குறிப்புகள் உள்ளன – குறுந்தொகை 14, 17, 32, 173, 182, நற்றிணை 146, 152, 220, 342, 377, கலித்தொகை 58, 61, 138, 139, 140, 141.  கலித்தொகை 138, 139, 140, 141 பாடல்களில் மட்டுமே தலைவன் மடல் குதிரையின் மீது செல்கின்றான்.  கலித்தொகை 138, 141 ஆகிய பாடல்களில் மடல் ஏறியதால் தலைவியை அடைகின்றான்.   தொல்காப்பியம் பொருள் அதிகாரம் – எத்திணை மருங்கினும் மகடூஉ மடல் மேல் பொற்புடை நெறிமை இன்மையான.   திருக்குறள் – கடலன்ன காமம் உழந்தும் மடலேறாப் பெண்ணின் பெருந்தக்கது இல் (1137), திருமங்கை ஆழ்வார் சிறிய திருமடல் பெருந்தெருவெ ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன் நான் வாரார் பூம் பெண்ணை மடல், திருமங்கை ஆழ்வார் பெரிய திருமடல்உன்னியுலவா உலகறிய ஊர்வன் நான், முன்னி முளைத்து எழுந்தோங்கி ஒளி பரந்த, மன்னியம் பூம் பெண்ணை மடல், நம்மாழ்வார்  திருவாய்மொழி – (3371) நாணும் நிறையும் கவர்ந்து, என்னை நல் நெஞ்சம் கூவிக்கொண்டு, சேண் உயர் வானத்து இருக்கும் தேவ பிரான் தன்னை ஆணை என் தோழீ! உலகு தோறு அலர் தூற்றி, ஆம் கோணைகள் செய்து  திரியாய் மடல் ஊர்துமே! நம்மாழ்வார்  திருவாய்மொழி (3372) யாம் மடல் ஊர்ந்தும் எம் ஆழி அங்கைப் பிரான் உடை தூ மடல் தண் அம் துழாய் மலர் கொண்டு சூடுவோம், ஆம் மடம் இன்றி, தெருவுதோறு அயல் தையலார் நா மடங்காப் பழி தூற்றி, நாடும் இரைக்கவே.  மாணிக்கவாசகர் திருக்கோவையார் – (75) அண்ணல் மடங்கல் அதள் அம் பலவன் அருளிலர்போல் பெண்ணை மடன் மிசை யான்வரப் பண்ணிற்று ஓர் பெண்கொடியே, மாணிக்கவாசகர் திருக்கோவையார் – (76) கழிகின்ற என்னையும் நின்ற நின் கார்மயில் தன்னையும் யான் கிழியன்ற நாடி எழுதிக் கைக் கொண்டென் பிறவிகெட்டின்(று) அழிகின்ற(து) ஆக்கிய தாள் அம்பலவன் கயிலையந்தேன் பொழிகின்ற சாரல் நும் சீறூர்த் தெருவிடைப் போதுவனே.

சொற்பொருள்:  மா என மதித்து – குதிரை என்று கருதி, மடல் ஊர்ந்து – பனை மடலில் வந்து, ஆங்கு மதில் என மதித்து – காவலுடைய மதில் என்று எண்ணி, வெண்தேர் ஏறி – கானல் நீரைத் தாண்டி, பேய்த்தேரைத் தாண்டி, என் வாய் – என் வாயால் கூற, நின்மொழி – உன்னுடைய சொற்களை, மாட்டேன் – நான் கூற மாட்டேன், நின் வயின் – உனக்காக, சேரி சேரா வருவோர்க்கு – நம்முடைய தெருவிற்கு உன்னுடைய உறவை நாடி வரும் தலைவனுக்கு, என்றும் அருளல் வேண்டும் – நீ அருள வேண்டும், அன்பு உடையோய் – அன்பு உடையவளே, என – என்று, கண் இனிதாகக் கோட்டியும் – கண்ணினால் இனிமையான குறிப்பை தலையைச் சாய்த்துக் காட்டியும், தேரலள் – அவள் அறியவில்லை, யானே – நான், எல் வளை – ஒளியுடைய வளையல் அணிந்த தலைவி (அன்மொழித்தொகை),  யாத்த கானல் – வேலிச் சூழ்ந்தக் கடற்கரைச் சோலை, வண்டு உண் – வண்டுகள் உண்ணும், நறு வீ – நறுமணமான மலர்கள், நுண்ணிதின் வரித்த – நுண்ணிதாகக் கோலம் செய்த, சென்னி – தலை, சேவடி – சிவந்த அடி, சேர்த்தின் – சேர்த்தால், என் எனப் படுமோ – சூழ்நிலை இப்பொழுது எவ்வாறு உள்ளது, என்றலும் உண்டே – என்று வினவுவதும் உண்டாகும்

புறநானூறு 215, பாடியவர்:  கோப்பெருஞ்சோழன், திணை: பாடாண், துறை: இயன் மொழி

பாடல் பின்னணி:  கோப்பெருஞ்சோழன் வடக்கிருக்கையில் சான்றோர் பலர் அவனைச் சூழ்ந்திருந்தனர்.  பலர் கூடவே இருந்தாலும் அவனது எண்ணம் பிசிராந்தையார்பால் ஒன்றியிருந்தது.  புலவர் பிசிராந்தையார் தன்னைக் காண வருவார் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றான் மன்னன்.

கவைக் கதிர் வரகின் அவைப்புறுவாக்கல்
தாதெரு மறுகின் போதொடு பொதுளிய
வேளை வெண் பூ வெண் தயிர்க் கொளீஇ
ஆய் மகள் அட்ட அம் புளி மிதவை
அவரை கொய்யுநர் ஆர மாந்தும்,  5
தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும்,
பிசிரோன் என்ப, என் உயிர் ஓம்புநனே,
செல்வக் காலை நிற்பினும்,
அல்லல் காலை நில்லலன் மன்னே.

பொருளுரை பிளவுபட்ட  கதிரையுடைய வரகின் குத்தி வடிக்கப்பட்ட சோற்றினையும், தாதாக உதிர்ந்த எருவுடைய தெருவில் உள்ள அரும்புடன் தழைத்த வேளைச் செடியின் வெள்ளைப் பூக்களை வெள்ளைத் தயிரில் இட்டு, ஆயர்மகள்  சமைத்த அழகிய புளிக்கூழையும், அவரைக்காயைக் கொய்பவர்கள் நிறைய உண்ணும், தெற்கில் உள்ள பொதிகை மலையுடைய மன்னனின் நல்ல பாண்டிய நாட்டில் உள்ள பிசிர் என்ற ஊரில் உள்ளவர் ஆந்தையார்.  என் உயிரைப் பாதுகாப்பவர்.  நான் ஆட்சியில் இருந்த காலத்தில் அவர் என்னைப் பார்க்காவிட்டாலும், நான் துன்பத்தில் இருக்கும் பொழுது வராமல் இருக்க மாட்டார்.

சொற்பொருள்:  கவைக் கதிர் வரகின் அவைப்புறுவாக்கல் – பிளவுபட்ட  கதிரையுடைய வரகின் குத்தி வடிக்கப்பட்ட சோறு, தாது எரு மறுகின் – தாதாக உதிர்ந்த எருவுடைய தெருவில், போதொடு பொதுளிய – மலர்களுடன் தழைத்த, வேளை வெண் பூ – வேளையின் வெள்ளைப்பூ, வெண் தயிர் கொளீஇ – வெள்ளைத் தயிரில் ஊற்றி, ஆய் மகள் அட்ட – ஆயர்மகள் சமைத்த, அம் புளி மிதவை – அழகிய புளியின் கூழை, அவரைக் கொய்யுநர் – அவரைக்காயைக் கொய்பவர்கள், ஆர மாந்தும் – நிறைய உண்ணும், தென்னம் பொருப்பன் நன்னாட்டு உள்ளும் – தென்திசையை ஆளும் மன்னனின் நல்ல நாட்டுள்ளும், பிசிரோன் என்ப – பிசிரோன் என்பார்கள், என் உயிர் ஓம்புநனே – என் உயிரைப் பாதுகாப்பவனே, செல்வக் காலை நிற்பினும் – செல்வம் இருந்த பொழுது அங்கு இருந்தாலும், அல்லல் காலை – துன்புறும் வேளை, நில்லலன் – அங்கு நிற்க மாட்டான், மன்னே – மன், ஏ அசைநிலைகள்

குறுந்தொகை 232, ஊண் பித்தையார், பாலைத் திணை – தோழி தலைவியிடம் சொன்னது
உள்ளார் கொல்லோ தோழி, உள்ளியும்
வாய்ப்பு உணர்வு இன்மையின் வாரார் கொல்லோ,
மரல் புகா அருந்திய மா எருத்து இரலை
உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய
யாஅ வரி நிழல் துஞ்சும்,  5
மா இருஞ்சோலை மலை இறந்தோரே?

பாடல் பின்னணிதலைவன் வினைவயின் (வேலையின் பொருட்டு) பிரிந்த காலத்தில் ஆற்றாளாய தலைவிக்கு ‘நீ ஆற்றியிருக்க வேண்டும்’ என்பதுபடத் தோழி கூறியது.

பொருளுரை:   மரலாகிய உணவை உண்ட பெரிய கழுத்தையுடைய ஆண் மான், உரலைப்போன்ற காலையுடைய யானை ஒடித்து உண்ட யா மரத்தின் வரிவரியான நிழலில், உறங்கும் பெரிய கரிய சோலைகளையுடைய மலைகளைக் கடந்து சென்ற நம் தலைவர், நம்மை நினைக்க மாட்டாரா தோழி?  நினைத்தும், தான் மேற்கொண்ட வினை முற்றுதல் பெறாமையினால் திரும்பி வர மாட்டாரோ?  விரைவில் வந்து விடுவார்.

குறிப்பு:   கொல் – ஐயப்பொருட்டு வந்த இடைச்சொல், ஓகாரம் அசைநிலை, யாஅ – அளபெடை.  இறந்தோரே – ஏகாரம் அசைநிலை.   குறுந்தொகை 37 – பிடி பசி களைஇய பெருங்கை வேழம் மென் சினை யாஅம் பொளிக்கும், குறுந்தொகை 232 – உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய யாஅ வரி நிழல், குறுந்தொகை 255 – யாஅத்துப் பொரி அரை முழு முதல் உருவக் குத்தி மறங்கெழு தடக் கையின் வாங்கி உயங்கு நடைச் சிறுகண் பெரு நிரை உறு பசி தீர்க்கும் தட மருப்பு யானை, அகநானூறு 335 – யானை தன் கொல் மருப்பு ஒடியக் குத்திச் சினஞ்சிறந்து இன்னா வேனில் இன் துணை ஆர முளி சினை யாஅத்து, மலைபடுகடாம் 429 – உம்பல் அகைத்த ஒண் முறி யாவும்.  உ. வே. சாமிநாதையர் உரை – தனக்கு வேண்டிய உணவைப் போதிய அளவு உண்ட இரலை யாமரத்தின் அடியின்கண் வந்து துஞ்சுதலைப் பார்ப்பாராதலின் தமக்கு வேண்டிய வினையை நன்கு முடித்து ஈண்டு வந்து நின்னொடு இன்புறுவர் என்பது குறிப்பு.  உள்ளார் கொல்லோ (1) பொ. வே. சோமசுந்தரனார் உரை – உள்ளார் கொல் என்ற வினா உள்ளுவர் என்னும் பொருள்பட நின்றது.  வாய்ப்பு உணர்வு (2) – பொ. வே. சோமசுந்தரனார் உரை – வினைமுற்றும் இடமறிதல், வினை முற்றாது மீள்வது அவர்க்குத் தகவு அன்று என்பாள் ‘உள்ளியும் வாரார்’ என்றாள்.

சொற்பொருள்:   உள்ளார் கொல்லோ தோழி – நம்மை நினைக்க மாட்டாரா தோழி, உள்ளியும் வாய்ப்பு உணர்வு இன்மையின் வாரார் கொல்லோ – தான் மேற்கொண்ட வினை முற்றுதல் பெறாமையினால் திரும்பி வர மாட்டாரோ, மரல் புகா அருந்திய – மரலாகிய உணவை உண்ட, மா எருத்து இரலை – பெரிய கழுத்தையுடைய ஆண் மான், உரல் கால் யானை – உரலைப்போன்று காலையுடைய யானை, ஒடித்து உண்டு எஞ்சிய யாஅ வரி நிழல் துஞ்சும் – ஒடித்து உண்ட யா மரத்தின் வரிவரியான நிழலில் உறங்கும், மா இருஞ்சோலை மலை இறந்தோரே – பெரிய கரிய சோலைகளையுடைய மலைகளைக் கடந்து சென்ற நம் தலைவர்

குறுந்தொகை 210, காக்கை பாடினியார் நச்செள்ளையார், முல்லைத் திணைதோழி தலைவனிடம் சொன்னது
திண் தேர் நள்ளி கானத்து, அண்டர்
பல் ஆ பயந்த நெய்யின், தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு,
ஏழு கலத்து ஏந்தினும், சிறிது, என் தோழி
பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு,  5
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே.

பாடல் பின்னணி:  தலைவியைப் பிரிந்து சென்றிருந்த தலைவன் மீண்டும் வந்தடைந்தான்.  தலைவிக்கு துணையாக இருந்த தோழிக்கு நன்றி கூறுகின்றான்.  அப்பொழுது அவள் இவ்வாறு உரைக்கின்றாள்.

பொருளுரை:  திண்மையான தேரையுடைய நள்ளியின் காட்டில் உள்ள இடையர்களின் பல பசுக்கள் கொடுத்த நெய்யுடன், தொண்டி என்ற ஊர் முழுவதும் நன்கு விளைந்த நெல்லினால் ஆக்கப்பட்ட சோற்றை, ஏழு கிண்ணங்களில் தூக்கிக் கொடுத்தாலும், என்னுடைய தோழியின் பெரிய தோளை நெகிழச் செய்த துன்பம் நீங்குவதற்கு, நீ வரும்படி கரைந்த காக்கைக்குக் கொடுக்கும் பலி, சிறிதே.

குறிப்பு:  பலி (6) – பலியே – ஏகாரம் அசை நிலை.  நள்ளி கடையெழு வள்ளல்களில் ஒருவன்.  ஐங்குறுநூறு 391 – மறு இல் தூவிச் சிறு கருங்காக்கை! அன்புடை மரபின், நின் கிளையோடு ஆரப் பச்சூன் பெய்த பைந்நிண வல்சி பொலம் புனை கலத்தில் தருகுவென் மாதோ வெஞ்சின விறல் வேல் காளையொடு அம் சில் ஓதியை வரக் கரைந்தீமே.   உ. வே. சாமிநாதையர் உரை – காக்கைக்கு இடும் உணவைப் பலி என்றல் மரபு.

சொற்பொருள்:  திண் தேர் நள்ளி – திண்மையான தேரையுடைய நள்ளி,  கானத்து – காட்டில் உள்ள, அண்டர் – இடையர், பல் ஆ பயந்த – பல பசுக்கள் கொடுத்த, நெய்யின் – நெய்யுடன், தொண்டி முழுதுடன் விளைந்த – தொண்டி என்ற ஊர் முழுதுடன் நன்கு விளைந்த,  வெண்ணெல் வெஞ்சோறு – வெண்ணெல் அரிசியால் ஆக்கிய வெம்மையான சோறு, ஏழு கலத்து ஏந்தினும் – ஏழு கிண்ணங்களில் தூக்கிக் கொடுத்தாலும்,  சிறிது – சிறிது, என் தோழி பெருந்தோள் நெகிழ்த்த – என்னுடைய தோழியின் பெரிய தோளை நெகிழச் செய்த, செல்லற்கு – நீக்கும் பொருட்டு, விருந்து வர – விருந்தினர் வரும்படி, நீ விருந்தினராக வரும்படி, கரைந்த காக்கையது பலியே – கரையும் காக்கைக்குக் கொடுக்கும் பலி (உணவு)

நற்றிணை 305, கயமனார், பாலைத் திணை – தலைவியின் தாய் தோழியிடம் சொன்னது
வரி அணி பந்தும், வாடிய வயலையும்,
மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும்,
கடியுடை வியல் நகர் காண்வரத் தோன்றத்
தமியே கண்ட தண்டலையும் தெறுவர
நோய் ஆகின்றே மகளை! நின் தோழி  5
எரி சினம் தணிந்த இலை இல் அம் சினை
வரிப் புறப் புறவின் புலம்பு கொள் தெள் விளி
உருப்பு அவிர் அமையத்து அமர்ப்பனள் நோக்கி
இலங்கு இலை வென்வேல் விடலையை,
விலங்கு மலை ஆர் இடை, நலியும் கொல் எனவே?  10

பாடல் பின்னணி:  தலைவியை உடன்போக்கில் தலைவன் கூட்டிச் சென்று விட்டான் என்பதை செவிலித்தாய் மூலம் அறிந்த நற்றாய் தோழியிடம் சொல்லியது.

பொருளுரை:  வரிப் பந்தையும், வாடிய வயலைக் கொடியையும், மயிலின் அடியைப் போன்ற இலைகளையுடைய கரிய நிறத்தில் உள்ள மலர்க் கொத்துக்களையுடைய நொச்சி மரத்தையும், காவலையுடைய பெரிய இல்லத்தில் நான் காணும்பொழுது வருந்துகின்றேன்.  அவள் இல்லாமல் தனியாக நான் காணும் சோலையும் எனக்கு வருத்தத்தைத் தருகின்றது.  மன நோயினால் வருந்துகின்றேன்.  மகளே!  உன்னுடைய தோழி, கதிரவனின் வெப்பம் தணிந்த வேளையில், இலைகள் இல்லாத அழகிய மரக்கிளைகளில் அமர்ந்தபடி வரிகளை முதுகில் கொண்ட புறாக்களின் வருந்தும் தெளிவான கூவுதலைக் கேட்டு, வெப்பம் மிகுந்த பொழுதில், விலக்குகின்ற மலையின் அரிய பாதையில், போரிடுபவள் போல நோக்கி, விளங்கும் இலையை உடைய வெற்றிகரமான வேலையுடைய தன்னுடைய காதலனை, வருத்துவாளோ?

குறிப்பு:  நலியும் கொல் (10) – ஒளவை துரைசாமி உரை – வேண்டாத வினாக்களை எழுப்பி வருத்துதல், பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் உரை – துன்புறுத்தல்.  மயிலடி அன்ன இலை – நற்றிணை 305 – மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும், நற்றிணை 115 – மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி, குறுந்தொகை 138 – மயில் அடி இலைய மா குரல் நொச்சி.  திருமுருகாற்றுப்படை 68  – வரிப் புனை பந்து – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்து,  நச்சினார்க்கினியர் உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்து,  வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி  உரை – நூலால் வரிந்து புனையப்பட்ட பந்து.  மதுரைக்காஞ்சி 333 – பொ. வே. சோமசுந்தரனார் உரை – நூலால் வரியப்பட்ட பந்து, நச்சினார்க்கினியர் உரை – நூலால் வரிதலையுடைய பந்து, வை. மு. கோபாலகிருஷ்ணமாச்சாரி உரை – நூலால் வரிதலையுடைய பந்து.  கலித்தொகை 51 – வரிப் பந்து – நச்சினார்க்கினியர் உரை – வரியினையுடைய பந்து.  தலைவி பந்துடன் விளையாடுதல் – புலவர் கயமனார் எழுதிய நற்றிணை 12, 305, 324 மற்றும் குறுந்தொகை 396 ஆகிய பாடல்களில் தலைவி பந்துடன் விளையாடும் குறிப்பு உள்ளது.  மகளை – ஐகாரம் முன்னிலை அசை.

சொற்பொருள்:  வரி அணி பந்தும் – ஒப்பனையுடைய பந்தும், வரிகள் உடைய பந்தும், வாடிய வயலையும் – வாடிய வயலைக் கொடியும், மயில் அடி அன்ன மாக் குரல் நொச்சியும் – மயிலின் அடியைப் போன்ற இலைகளையுடைய கரிய நிறத்தில் உள்ள மலர்க் கொத்துக்களையுடைய நொச்சி மரமும், கடியுடை வியல் நகர் – காவலையுடைய பெரிய இல்லம், காண்வரத் தோன்ற – நான் காணுமாறு தோன்ற, தமியே – தனியாக, கண்ட – நான் கண்ட, தண்டலையும் – சோலையும், தெறுவர நோய் ஆகின்றே – வருத்தம் தருகின்றன, மகளை – மகளே, நின் தோழி – உன்னுடைய தோழி (என் மகள்), எரி சினம் தணிந்த – கதிரவனின் வெப்பம் தணிந்த, இலை இல் அம் சினை – இலைகள் இல்லாத அழகிய மரக்கிளை, வரிப் புறப் புறவின் – வரிகளை முதுகில் கொண்ட புறாக்களின், புலம்புகொள் தெள் விளி – வருந்தும் தெளிவான கூவுதல், உருப்பு அவிர் அமையத்து – வெப்பம் விளங்கும் பொழுது, அமர்ப்பனள் நோக்கி – போரிடுபவள் போல் நோக்கி, இலங்கு இலை – விளங்கும் இலை வடிவமாகிய, வென்வேல் – வெற்றிகரமான வேல், விடலையை – இளைஞனை, விலங்கு மலை – விலக்குகின்ற மலை, தடுப்பாக உள்ள மலை, ஆர் இடை – அரிய பாதை, நலியும் கொல் எனவே – வருத்துவாளோ என்று

மரம், செடி, கொடி, மலர்: அகரு (அகில்), அகில், அடும்பு, அதவம் (அத்தி மரம்), அதிரல் (காட்டு மல்லிகை), அமை (மூங்கில்), அரலை (அரளி), அரிசி (நெல்லின் அரிசி, மூங்கில் விதை, வரகின் அரிசி), அரையம் (அரச மரம்), அல்லி, அவரை, அறுகை (அறுகம்புல்), அனிச்சம் (ஒரு வகையான மலர்), ஆஅம் (ஆச்சா மரம்), ஆசினி (கறிபலா), ஆம்பல், ஆம்பி (காளான்), ஆரம் (சந்தனம்), ஆர் (ஆத்தி – சோழ மன்னரின் மலர்), ஆரம் (சந்தனம்), ஆலம் (ஆல மரம்), ஆவிரை, இகணை (ஒரு வகை மரம்), இஞ்சி, இத்தி (அத்தி மரம்), இரத்தி (மலை இலந்தை), இரம் (இரவம், இருள் மரம்), இருப்பை (இலுப்பை,வஞ்சி), இல்ல மரம், இலவம், இலஞ்சி (மகிழ மரம்), இற்றி (அத்தி), இறடி (தினை), ஈங்கை (தொட்டாற்சுருங்கி), ஈந்து (ஈச்ச மரம்), உகாஅ (உகாய், உவா மரம்), உடை (உடை மரம்), உந்தூழ் (பெரிய வகையான மூங்கில்), உயவைக் கொடி, உலவை (உடை மரம்), உழிஞ்சில் (வாகை மரம்), உழிஞை (கொற்றான்), உழுந்து, உள்ளி (பூண்டு), உன்ன மரம், ஊகச் செடி, எள், எருக்கம் மலர், எருவை (கொறுக்கச்சி), எறுழ், எறுழம், ஏனல் (தினை), ஐயவி (வெள்ளைக் கடுகு),  ஐவனம் (மலை அரிசி), ஒடு (குடைவேல மரம்), ஓமை மரம், கடம்ப மரம், கடிப்பகை (சிறு வெண்கடுகு), கடு மரம், கடுக்கை (சரக்கொன்றை), கணவிரம் (சிவப்பு அரளி), கணிகாரம் (கோங்க மலர்கள்), கண்டல் (தாழை), கண்பு (சம்பங்கோரை), கமுகு (கொட்டைப்பாக்கு மரம்), கரந்தை (முள்ளுடைய ஒரு வகைச் செடி, திருநீற்றுப் பச்சை), கரும்பு, கருவிளை மலர், கருனை (கருனைக் கிழங்கு, கருணைக் கிழங்கு), கல்லகாரம் (ஒரு வித மலர்), ( கவ்வை (எள்ளிளங்காய்), கவலை (ஒரு வித கிழங்கு), கவிர் (முருக்க மரம்), கழங்கு (கழற்சிக்காய்), கழுநீர் (குவளை மலர்), கழை (மூங்கில்), கள்ளி, களம், களவு (களாக்காய்), கறி (மிளகு), காஞ்சி (பூவரச மரம்), காம்பு (மூங்கில்), காயா (காசா மரம்), காரை (ஒரு வகை முட்செடி), காவி (செங்குவளை), காழ்வை (அகில்), காளாம்பி (காளான்), கிடை (வெண்கிடை, நெட்டிச் செடி), கிழங்கு (சேம்பு, வள்ளிக் கிழங்கு, நாணல் கிழங்கு),  குச்சுப் புல், குடசம் (மலை மல்லிகை), குப்பைக்கீரை, குமிழ மரம், குரவ மரம், குருகிலை (முருக்கிலை மரம்), குருகு (மாதவிக்கொடி), குருக்கத்தி  (மாதவிக்கொடி), குருந்தம், குல்லை, குவளை, குளவி (மரமல்லி), குறிஞ்சி, குறுநறுங்கண்ணி (குன்றி, குன்னிமுத்து), கூவிரம்,  கூவிளம் (வில்வ மரம்), கூதளம் (தாளிக்கொடி), கூவை (arrowroot), கூழம் (நெல்), கைதை (தாழை), கொக்கு (மாமரம்), கொகுடி (முல்லை வகை), கொள், கொன்றை (சரக் கொன்றை), கோங்கம், கோடல் (வெண்காந்தள்), கோளி (பூக்காது பழுக்கும் மரம்), கௌவை (எள்ளிளங்காய்), சண்பகம், சந்தனம் (சந்தம், சாந்தம்), சாய் (கோரைப் புல்), சிலை மரம், சிந்துவாரம் (கருநொச்சி), சுரபுன்னை (வழை), சுரை (சுரைக்காய்), சுள்ளி, சூரல், செங்கழுநீர், செங்குரலி (சிறுசெங்குரலி), செங்குவளை, செங்கொடுவேரி, செச்சை, செந்தினை, செய் (கிடேச்சு, நெட்டி), செயலை (பிண்டி மரம்), செருவிளை, செருந்தி, சேடல், சேம்பு, ஞாழல், ஞெமை மரம், தகரம் (மரம்), தணக்கம், தடா மரம், தமாலம், தருப்பை (தருப்பைப் புல்), தளவம் (செம்முல்லை), தாமரை, தாளி (ஒரு வகைக் கொடி, கூந்தற்பனை மரம்), தாரம் (மரம்), தாழை, தில்லை, திலகம், தினை, துடரி, தும்பை, துராஅய் (அறுகம் புல்), துளர் (களை), துளவம் (துளசி), தெங்கு (தென்னை), தேக்கு, தேறு (தேற்றா மரம்), தொய்யில் கொடி, தோரை (ஒரு வித நெல்), தோன்றி (செங்காந்தள்), நந்தி (நந்தியாவட்டம்), நள்ளிருள்நாறி, நளினம் (தாமரை), நறவம், நாக மரம், நாணல் (ஒரு விதமான புல்), நாவல் மரம், நீலம் (குவளை), நுங்கு, நுணவம் (நுணா மரம்), நூறை (நூறைக் கிழங்கு), நெய்தல், நெருஞ்சி, நெல், நெல்லி, நொச்சி மரம், நரந்தம், நறைக்காய் (சாதிக்காய்),  பகன்றை, பசும்பிடி (பச்சிலை), பஞ்சி, பணை (மூங்கில்), பண்ணைக் கீரை, பதவு (அறுகம்புல்), பதுமம் (தாமரை), பயிறு, பயினி (குந்துருக்கம்), பருத்தி, பலா, பலாசம் (புரசமரம்), பனை மரம், பாகல் (பாகற்காய்), பாகல் (பலா), பாங்கர் (உகா மரம்), பாசி (moss), பாதிரி மலர், பாரம் (பருத்தி), பாலை (பாலை நிலத்தில் உள்ள மரம்), பிடவம், பித்திகம், பித்திகை (பிச்சிப்பூ), பிரண்டை, பிரம்பு, பீரம் (பீர்க்கை), புழகு (மலை எருக்கு, calotropis, அல்லது புனமுருங்கை), palas tree புளி, புன்கு, புன்னாகம், புன்னை, பூவை (காயா), பூழில் (அகில்), பூளை, பெண்ணை (பெண் பனை மரம்), பெருவாய் மலர் (இருவாட்சிப்பூ), பைஞ்சாய் (கோரைப்புல்), போங்கம் (மஞ்சாடி மர வகை), போந்தை (பனை), மகிழ மரம், மஞ்சள், மணிச்சிகை மலர், மயிலை (இருவாட்சி), மரல் (பெருங்குரும்பை, snake plant), மராஅம் (கடம்பம்), மருதம், மரை (தாமரை), மல்லிகை, மனை மரம், மா (மாமரம், மாங்கனி), மாணைக் கொடி, மாதுளம் பழம், மாழை (மாவடு), மிரியல் (மிளகு), முசுண்டை (Rivea ornata, Leather-berried bindweed), முஞ்ஞை (முன்னைக் கீரை), முண்டகம் (நீர் முள்ளிச் செடி), முந்தூழ் (மூங்கில்), முருக்கம், முருங்கை, முல்லை, முளரி (தாமரை), மூங்கில், மோரோடம், மௌவல், யா, வகுளம், வஞ்சி மரம், வடவனம் (துளசி வகை), வடி, வடு (மாவடு), வயலைக் கொடி, வரகு, வழை (சுரபுன்னை), வள்ளிக் கிழங்கு, வள்ளை, வளகு மரம், வன்னி மரம், வாகை, வாழை, விடத்தேரை மரம், விளவு (விளாம்பழம்), வாள்வீரம் (வீரை மரம்), வெட்சி (செச்சை), வெண்கூதாளம், வெதிர் (மூங்கில்), வெள்ளில் (விளாம்பழம்), வெள்ளோத்திரம் (ஒரு வகை இலவ மரம்), வேங்கை மரம்,  வேலம் (panicled babool), வேம்பு, வேய் (மூங்கில்), வேரல் (சிறு மூங்கில்), வேளைச் செடி, வேழம் (பிரம்பு)